உமர் ஷரீஃப் — 96
4:106 இன்னும், நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
4:107 இன்னும் (மக்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே மோசடி செய்பவர்கள் சார்பாக நீர் வாதிடாதீர். (அவர்களுக்காக நீர் வழக்காடாதீர்!) பெரும் சதிகாரனாக (மோசடிக்காரனாக), பெரும் பாவியாக இருப்பவன் மீது நிச்சயமாக அல்லாஹ் அன்பு வைக்க மாட்டான்.
4:108 இவர்கள் (தம் குற்றத்தை) மக்களிடம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முயற்சிப்பதில்லை. அல்லாஹ் விரும்பாத பேச்சை இவர்கள் இரவில் சதித்திட்டம் செய்யும்போது அவன் அவர்களுடன் இருந்தான். இன்னும், அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்(தறிந்)தவனாக இருக்கிறான்.
4:109 (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இவர்கள் சார்பாக இவ்வுலக வாழ்க்கையில் வாதிடுகிறீர்களா? ஆக, மறுமை நாளில் இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார் வாதிடுவார்? அல்லது, (அல்லாஹ்விடம் தர்க்கம் செய்வதற்கு) இவர்கள் சார்பாக யார் பொறுப்பாளராக இருப்பார்?
4:110 இன்னும், எவர், ஒரு தீமையைச் செய்வாரோ; அல்லது, தனக்குத்தானே அநீதி இழைப்பாரோ; பிறகு, அவர் (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரோ அவர் அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்.
4:111 இன்னும், எவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கிறாரோ அவர் அதைச் சம்பாதிப்பதெல்லாம் தனக்கெதிராகத்தான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
4:112 இன்னும், எவர் ஒரு குற்றத்தை அல்லது ஒரு பாவத்தை செய்வாரோ; பிறகு, அதை ஒரு நிரபராதி மீது சுமத்துவாரோ அவர் திட்டமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையும் (தன்மீது) சுமந்து கொண்டார்.
4:113 (நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக (உள்ளத்தில்) உறுதியாக நாடியிருப்பார்கள். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். இன்னும், நீர் அறிந்திருக்காதவற்றை உமக்குக் கற்பித்(து கொடுத்)தான். இன்னும், உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது.