>

உமர் ஷரீஃப் — 93

4:92 தவறுதலாகவே தவிர, ஒரு நம்பிக்கையாளரை கொல்வது இன்னொரு நம்பிக்கையாளருக்கு ஆகுமானதல்ல. எவராவது ஒரு நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொன்றால் (அதற்குப் பரிகாரம்) நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிட வேண்டும்; இன்னும் (இறந்த) அவருடைய குடும்பத்தாரிடம் (அதற்குரிய) நஷ்ட ஈட்டை ஒப்படைக்க வேண்டும். (ஆனால், குடும்பத்தினர் நஷ்ட ஈட்டுத் தொகையை கொலையாளிக்கு) தானமாக்கினால் தவிர. (கொல்லப்பட்ட) அவன் உங்கள் எதிரி சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்து, அவர் நம்பிக்கையாளராகவும் இருந்தால், நம்பிக்கையாளரான ஓர் அடிமையை (மட்டும்) உரிமையிடவேண்டும். (கொல்லப்பட்ட) அவர் உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் (சமாதான, நட்பு) உடன்படிக்கை உள்ள சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் அவருடைய குடும்பத்தினரிடம் நஷ்டஈடு ஒப்படைக்கப்படும்: இன்னும், நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும். (நஷ்டஈடு வழங்க) எவர் வசதி பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பிருத்தல் வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

4:93 எவர் ஒரு நம்பிக்கையாளரை மனம் நாடியவராக (வேண்டுமென்றே) கொல்வாரோ அவருக்குரிய தண்டனை நரகம்தான். இன்னும், அதில் அவர் நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், அவர் மீது அல்லாஹ் கோபித்துவிட்டான். இன்னும், அவரைச் சபித்தான். இன்னும், பெரிய தண்டனையையும் அவருக்காக தயார் செய்திருக்கிறான்.

4:94 நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) நீங்கள் பயணித்தால் (எதிரே இருப்பவர்களைத்) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஸலாம் கூறிய நபரை நோக்கி, உலக வாழ்க்கையின் (அற்ப) செல்வத்தை நீங்கள் தேடியவர்களாக “நீ நம்பிக்கையாளர் இல்லை” என்று கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (இதற்கு) முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். ஆக, அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்(து உங்களை முஸ்லிம்களாக்கி கண்ணியத்தைத் தந்)தான். ஆகவே (வழியில் உங்களை சந்திப்பவரை) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.