உமர் ஷரீஃப் — 92
4:87 அல்லாஹ் அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகம் இல்லை. பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?
4:88 ஆக, (நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்கள் விஷயத்தில் (நீங்கள் முரண்பட்ட) இரு பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த (பாவத்)தின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தாழ்த்தினான். அல்லாஹ் வழிகெடுத்தவரை நீங்கள் நேர்வழிப்படுத்த நாடுகிறீர்களா? எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியை அறவே நீர் காணமாட்டீர்!
4:89 அவர்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் நிராகரித்து (அவர்களுக்கு) சமமாக நீங்கள் ஆகிவிடுவதை (அவர்கள்) விரும்புகிறார்கள். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் ஹிஜ்ரத் செய்கின்ற வரை அவர்களில் (உங்களுக்கு) பொறுப்பாளர்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (ஹிஜ்ரத் செய்யாமல்) அவர்கள் விலகினால் அவர்களை (சிறைப்) பிடியுங்கள்! (அவர்கள் உங்களை எதிர்த்து சண்டை செய்தால்) அவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் அவர்களைக் கொல்லுங்கள்; (உங்களுக்கு) அவர்களிலிருந்து பொறுப்பாளரையும் உதவியாளரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
4:90 உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்த சமுதாயத்திடம் சென்று சேர்ந்தவர்களைத் தவிர; அல்லது, அவர்கள் உங்களிடம் போர்புரிய அல்லது அவர்கள் தங்கள் சமுதாயத்திடம் போர்புரிய அவர்களது (மனம் நாடாமல்) நெஞ்சங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்தவர்களைத் தவிர. (அவர்களைக் கொல்லாதீர்கள்; சிறைப் பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களைச் சாட்டியிருப்பான். அவர்கள் உங்களிடம் போரிட்டிருப்பார்கள். ஆகவே, (இவர்கள்) உங்களை விட்டு விலகி உங்களிடம் போரிடாமல் உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பித்தால் (அதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போரிட) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் (-தகுந்த காரணம் எதையும்) ஆக்கவில்லை.
4:91 (இவர்களல்லாத) மற்றவர்களை (நீங்கள்) காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்புப் பெறவும் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் சமுதாயத்திடம் பாதுகாப்புப் பெறவும் நாடுகிறார்கள். குழப்பம் விளைவிப்பதற்கு அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம் அதில் குப்புற விழுந்து விடுகிறார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகாமலும், உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பிக்காமலும், தங்கள் கைகளை (உங்களுக்கு தீங்கு செய்வதிலிருந்து) தடுக்காமலும் இருந்தால், அவர்களை (சிறைப்) பிடியுங்கள். (தப்பிச் செல்பவர்களை) நீங்கள் எங்கு அவர்களைப் பெற்றாலும் அவர்களைக் கொல்லுங்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை நாம் ஆக்கிவிட்டோம்.