உமர் ஷரீஃப் — 83
4:27 இன்னும், அல்லாஹ்வோ உங்களை மன்னிக்க நாடுகிறான். ஆனால், காம ஆசைகளை பின்பற்றுபவர்கள் நீங்கள் (நேர்வழியிலிருந்து விலகி வழிகேடு, இன்னும் மானக் கேடான காரியங்கள் பக்கம்) முழுமையாக சாய்வதையே விரும்புகிறார்கள்.
4:28 அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு இலகுவாக்க நாடுகிறான். மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்.
4:29 நம்பிக்கையாளர்களே! உங்களின் பரஸ்பர விருப்பத்துடன் நடைபெறும் வர்த்தகமாக இருந்தால் தவிர, நீங்கள் உங்கள் செல்வங்களை உங்களுக்கு மத்தியில் தவறான முறையில் புசிக்காதீர்கள். இன்னும், உங்கள் உயிர்களை கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
4:30 இன்னும், எவர் அ(ல்லாஹ் தடுத்த)தை எல்லை மீறியும், அநியாயமாகவும் செய்வாரோ அவரை நரக நெருப்பில் எரிப்போம். அது அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது!
4:31 உங்களுக்கு தடுக்கப்பட்ட பாவங்களில் பெரும்பாவங்களை விட்டு நீங்கள் விலகினால், உங்களை விட்டும் உங்கள் சிறு பாவங்களை நாம் போக்கிவிடுவோம். இன்னும், உங்களை கண்ணியமான இடத்தில் பிரவேசிக்க வைப்போம்.
4:32 உங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. இன்னும், அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
4:33 தாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை நாம் ஏற்படுத்தினோம். இன்னும், எவர்களுடன் பங்காளி உறவை உங்கள் சத்தியங்கள் மூலம் நீங்கள் ஒப்பந்தம் செய்து உறுதி செய்தீர்களோ அவர்களுக்கு (உங்கள் சொத்தில்) அவர்களின் பங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான். (இந்த சட்டம் பிற்காலத்தில் இறக்கப்பட்ட சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு மாற்றப்பட்டு விட்டது.)