உமர் ஷரீஃப் — 69
3:149 நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்கள் குதிங்கால்கள் மீது உங்களை அவர்கள் (இறை நம்பிக்கையிலிருந்து நிராகரிப்பின் பக்கம்) திருப்பி விடுவார்கள். ஆக, (அப்போது நீங்கள் வழிகெட்டு, இம்மையையும் மறுமையையும் இழந்து) நஷ்டவாளிகளாக திரும்பி விடுவீர்கள்.
3:150 மாறாக, அல்லாஹ்தான் உங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவான். இன்னும், உதவியாளர்களில் அவனே (உங்களுக்கு மிகச்) சிறந்தவன் ஆவான்.
3:151 அல்லாஹ் எதற்கு ஓர் ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு இணையாக்கி வணங்கிய காரணத்தால் அந்த நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை போடுவோம். இன்னும், அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
3:152 (நம்பிக்கையாளர்களே! உஹுத் போரில்) நீங்கள் அவனுடைய அனுமதியுடன் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை வெட்டி வீழ்த்தியபோது அல்லாஹ் தன் வாக்கை உங்களுக்கு திட்டவட்டமாக உண்மையாக்கினான். இறுதியாக, நீங்கள் கோழையாகி, (தூதருடைய) கட்டளையில் தர்க்கித்து, நீங்கள் விரும்புவதை அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு பின்னர் (தூதருக்கு) மாறுசெய்தபோது (அல்லாஹ் தன் உதவியை நிறுத்தினான்). (மலைக் குன்றின் மீது நிறுத்தப்பட்டிருந்த) உங்களில் உலக (செல்வ)த்தை நாடி (நபியின் கட்டளையை மீறி மலையிலிருந்து கீழே இறங்கி)யவரும் உண்டு. இன்னும், உங்களில் மறுமை(யின் நன்மை)யை நாடிய (நபியின் கட்டளைப்படி அங்கேயே இருந்து வீர மரணம் அடைந்த)வரும் உண்டு. பிறகு உங்களைச் சோதிப்பதற்காக (தோற்கடிக்கப்பட இருந்த) அவர்களை விட்டும் உங்களை திருப்பினான். (இன்னும் உங்கள் தவறுக்குப் பின்னர்) திட்டவட்டமாக அவன் உங்களை மன்னித்துவிட்டான். அல்லாஹ், நம்பிக்கையாளர்கள் மீது (எப்போதும் விசேஷமான) அருளுடையவன் ஆவான்.
3:153 (உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு (படையின் இறுதி(ப் பகுதி)யில் இருந்தவாறு உங்களை அழைக்க, நீங்கள் ஒருவரையும் எதிர்பார்க்காமல் வேகமாக ஓடிய சமயத்தை நினைவு கூருங்கள். (தூதருக்கு நீங்கள் கொடுத்த) துயரத்தின் காரணமாக உங்களுக்கு(ம் தோல்வியின்) துயரத்தையே (அல்லாஹ்) கூலியாக்கினான், காரணம், உங்களுக்கு தவறிவிட்ட வெற்றிக்காகவும்; இன்னும், உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காகவும் நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகும். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.