>

உமர் ஷரீஃப் — 67

3:133 இன்னும், உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.

3:134 அவர்கள், செல்வத்திலும் வறுமையிலும் தர்மம் செய்வார்கள்; இன்னும், கோபத்தை மென்றுவிடுவார்கள்; இன்னும், மக்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.

3:135 இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால்; அல்லது, தங்களுக்குத் தாமே அநீதியிழைத்துவிட்டால் (உடனே) அல்லாஹ்வை நினைவில் கொண்டுவருவார்கள்; தங்கள் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்தவர்களாக இருந்த நிலையில் தாங்கள் செய்த (பாவத்)தின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார்கள்.

3:136 அத்தகையவர்கள் - அவர்களின் கூலி அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கங்களும் ஆகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நல்ல அமல் செய்பவர்களின் கூலி மிக சிறந்ததாக இருக்கும்!

3:137 உங்களுக்கு முன்னர் (பாவிகளுடன் அல்லாஹ் நடந்து கொண்ட) பல நடைமுறைகள் (இன்னும் அவர்கள் மீது அல்லாஹ் இறக்கிய பல தண்டனைகள்) சென்றுவிட்டன. ஆகவே, பூமியில் சுற்றுங்கள். இன்னும், பொய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள்!

3:138 (குர்ஆனாகிய) இது (உலக) மக்கள் அனைவருக்கும் ஒரு தெளிவுரையும் நேர்வழிகாட்டியுமாகும். இன்னும், (குறிப்பாக) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு (இது) (பலனளிக்கும்) நல்லுபதேசம் ஆகும்.

3:139 நீங்கள் துணிவு இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; நீங்கள்தான் உயர்ந்தவர்கள் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால்.

3:140 உங்களுக்கு காயம் (-உயிர்ச் சேதம், உடல் சேதம்) ஏற்பட்டால் (நிராகரிப்பவர்களாக இருக்கின்ற அந்த) மக்களுக்கும் அது போன்ற காயம் (-உயிர்ச் சேதம், உடல் சேதம்) ஏற்பட்டுள்ளது. (சோதனைகள் நிறைந்த) அந்த நாள்கள் - அவற்றை மக்களுக்கு மத்தியில் (சில சமயம் அவர்களுக்கும் சில சமயம் உங்களுக்கும்) நாம் சுழற்றுகிறோம். (உண்மையான) நம்பிக்கையாளர்களை அல்லாஹ் (நீங்கள் அறியும்படி வெளிப்படையாக) அறிவதற்காகவும், உங்களில் சிலரை போரில் கொல்லப்படும் தியாகிகளாக அவன் எடுப்பதற்காகவும் (காலங்களை ஒரு சமயம் உங்களுக்கு சாதகமாகவும் ஒரு சமயம் உங்களுக்கு பாதகமாகவும் அல்லாஹ் சுழற்றுகிறான்). (அல்லாஹ்வின் மார்க்கத்தை எதிர்க்கின்ற) அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்க மாட்டான்.