>

உமர் ஷரீஃப் — 64

3:109 இன்னும், வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன! இன்னும், அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் அனைத்தும் திருப்பப்படும்.

3:110 (நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்களோ பாவிகள்தான்.

3:111 (நம்பிக்கையாளர்களே! ஒரு சொற்ப) சிரமத்தைத் தவிர உங்களுக்கு அவர்கள் அறவே தீங்கு செய்யமுடியாது. இன்னும், உங்களிடம் அவர்கள் போரிட்டால் உங்களைவிட்டும் அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். பிறகு, (அல்லாஹ்வின் புறத்திலிருந்து) அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.

3:112 அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. எனினும், அல்லாஹ்வின் ஒப்பந்தம்; இன்னும், மக்களின் ஒப்பந்தத்தின் மூலமே தவிர அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. இன்னும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை சுமந்துகொண்டார்கள். ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டது. அதற்கு காரணம், “நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்களாக இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்பவர்களாக இருந்ததும் ஆகும். இன்னும், அதற்கு காரணம் அவர்கள் மாறுசெய்ததும், (இறைக் கட்டளையை) மீறுபவர்களாக இருந்ததும் ஆகும்.

3:113 (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்கள் (எல்லோரும்) சமமானவர்களாக இல்லை. வேதக்காரர்களில் நீதமான ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் (இஸ்லாமை மார்க்கமாக ஏற்று) இரவு நேரங்களில் சிரம்பணிந்து தொழுதவர்களாக[1] அல்லாஹ்வின் வசனங்களை (தொழுகையில்) ஓதுகிறார்கள்.

3:114 அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறார்கள்; இன்னும், நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறார்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்; இன்னும், நன்மைகளில் விரைகிறார்கள். இவர்கள்தான் நல்லோரில் உள்ளவர்கள்.

3:115 இன்னும், அவர்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அதன் நன்மையை அறவே இழக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் (உண்மையான) இறை அச்சமுள்ளவர்களை நன்கறிந்தவன்.