உமர் ஷரீஃப் — 591
86:1 வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரங்கள்) மீது சத்தியமாக!
86:2 (நபியே!) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86:3 (அது) மின்னக்கூடிய பிரகாசிக்கக்கூடிய நட்சத்திரமாகும்.
86:4 ஒவ்வோர் ஆன்மாவும் இல்லை, அதன் மீது (அதன் செயலை கண்காணிக்கிற) ஒரு காவலர் இருந்தே தவிர.
86:5 ஆக, மனிதன், அவன் எதிலிருந்து படைக்கப்பட்டான் எனப் பார்க்கட்டும்.
86:6 வேகமாக ஊற்றப்படக்கூடிய (இந்திரியம் எனும்) தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்.
86:7 அது முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளியேறுகிறது.
86:8 நிச்சயமாக அவன், அவனை மீண்டும் படைப்பதற்கு ஆற்றல்மிக்கவன் ஆவான்,
86:9 இரகசியங்கள் சோதிக்கப்படுகிற (பகிரங்கப்படுத்தப்படுகிற) நாளில்.
86:10 ஆக, அவனுக்கு (-மனிதனுக்கு) சக்தி ஏதும் இருக்காது; உதவியாளர் யாரும் இருக்க மாட்டார்.
86:11 (மீண்டும் மீண்டும்) மழையை பொழியக்கூடிய வானத்தின் மீது சத்தியமாக!
86:12 தாவரங்களை முளைக்க செய்கிற பூமியின் மீது சத்தியமாக!
86:13 நிச்சயமாக இது (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதமாகும்.
86:14 இது, விளையாட்டு அல்ல. (-பொய்யான, கேலியான பேச்சல்ல).
86:15 நிச்சயமாக அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்.
86:16 நானும் சூழ்ச்சி செய்கிறேன்.
86:17 ஆக, நிராகரிப்பாளர்களுக்கு அவகாசமளிப்பீராக! அவர்களுக்கு சிறிது காலம் அவகாசமளிப்பீராக!
87:1 (நபியே!) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப்படுத்தி தொழுவீராக!
87:2 அவன் படைத்தான்; இன்னும், (தனது படைப்புகளை) ஒழுங்கு படுத்தினான்.
87:3 இன்னும், அவன் நிர்ணயம் செய்தான் (-அளவிட்டான், திட்டமிட்டான்); இன்னும், (படைப்புகள், தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அடைந்துகொள்ள தேவையான வழிகளை) வழிகாட்டினான்.
87:4 இன்னும், அவன் பசுமையான புல்லை (பூமியில்) வெளியாக்கினான் (உற்பத்தி செய்தான்).
87:5 பிறகு, அதைக் (காய்ந்து) கருத்துப்போன சருகாக ஆக்கினான்.
87:6 (நபியே! அல் குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். ஆக, (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர்,
87:7 அல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் நன்கறிவான்.
87:8 இன்னும், சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்குவோம்.
87:9 ஆகவே, (யாருக்காவது) அறிவுரை பலனளிக்கும் என்றால் (அவர்களுக்கு) அறிவுரை கூறுவீராக!
87:10 (அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.