>

உமர் ஷரீஃப் — 587

82:1 (யுக முடிவில்) வானம் பிளந்துவிடும் போது,

82:2 இன்னும், நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது,

82:3 இன்னும், கடல்கள் பிளக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடும்போது,

82:4 இன்னும், சமாதிகள் (அவற்றில் உள்ளவர்கள் எழுப்பப்படுவதற்காக) புரட்டப்படும்போது,

82:5 (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும், அது முற்படுத்தியதையும், அது பிற்படுத்தியதையும் அறிந்து கொள்ளும். (-ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மையையும் தீமையையும், அவ்வாறே தனக்கு பின்னர் வருவோர் தன்னை பின்பற்றும்படி வழிகாட்டிவிட்டு வந்த நல்ல காரியத்தை; அல்லது, தீய காரியத்தை அறிந்து கொள்ளும்.)

82:6 மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?

82:7 அவன்தான் உன்னைப் படைத்தான். இன்னும், அவன் உன்னை (தோற்றத்திலும் உறுப்புகளிலும்) சமமாக்கினான் (-ஒவ்வொரு உறுப்பையும் சீராக, ஒரு ஒழுங்குடன் படைத்தான்). இன்னும், உன்னை (அவன் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்.

82:8 எந்த உருவத்தில் (உன்னை படைக்க வேண்டும் என்று) நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்.

82:9 அவ்வாறல்ல! மாறாக, (நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படுவதையும்) கூலி கொடுக்கப்படுவதை(யும்) பொய்ப்பிக்கிறீர்கள்.

82:10 நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள்.

82:11 (அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள்.

82:12 நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (பிறகு, அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.)

82:13 நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள்.

82:14 இன்னும், நிச்சயமாகத் தீயோர் ஜஹீம் என்ற நரகத்தில் இருப்பார்கள்.

82:15 (அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள்.

82:16 இன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை.

82:17 இன்னும், (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

82:18 பிறகு, கூலி நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

82:19 (அது) ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் (செய்வதற்கு) உரிமை பெறாத நாள். அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே உரியதாக இருக்கும்!

83:1 மோசடிக்காரர்களுக்கு நாசம்தான்.

83:2 அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (பொருளை) நிறைவாக (அளந்து) வாங்குகிறார்கள்.

83:3 இன்னும், அவர்களுக்கு (இவர்கள்) அளந்து கொடுக்கும்போது; அல்லது, அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும்போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள் (-நஷ்டப்படுத்துகிறார்கள்).

83:4 “நிச்சயமாக அவர்கள் (மறுமை நாளில் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள்” நம்பவில்லையா?