உமர் ஷரீஃப் — 574
73:1 போர்வை போர்த்தியவரே!
73:2 (வணக்க வழிபாட்டுக்காக) இரவில் எழுந்து தொழுவீராக, (இரவில்) குறைந்த நேரத்தைத் தவிர! (அந்த குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பீராக!)
73:3 அதன் (-இரவின்) பாதியில் எழுந்து தொழுவீராக! அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!)
73:4 அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!
73:5 நிச்சயமாக நாம் உம்மீது மிக கனமான (சட்டங்களை உடைய) வேதத்தை இறக்குவோம்.
73:6 நிச்சயமாக இரவு (நேர) வணக்கம் அதுதான் மிகவும் வலுவான தாக்கமுடையதும் அறிவுரையால் (அறிவுரையின் மூலம் படிப்பினை பெறுவதற்கு) மிகத் தெளிவானதும் (-மிகப் பொருத்தமானதும்) ஆகும்.
73:7 நிச்சயமாக பகலில் உமக்கு நீண்ட ஓய்வு இருக்கிறது. (அதில் உமது உலகத் தேவைகளையும் உறக்கத்தையும் நீர் நிறைவேற்றலாம்.)
73:8 உமது இறைவனின் பெயரை நினைவு கூர்(ந்து அவனை அழைத்து, பிரார்த்தித்து வணங்கு)வீராக! இன்னும், அவன் பக்கம் முற்றிலும் நீர் ஒதுங்கிவிடுவீராக!
73:9 அவன்தான் கிழக்கு இன்னும் மேற்கின் இறைவன் ஆவான். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, அவனையே (உமக்கு) பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்வீராக!
73:10 இன்னும், அவர்கள் பேசுவதை சகிப்பீராக! இன்னும், அழகிய விதத்தில் அவர்களை விட்டு வி(லகி வி)டுவீராக!
73:11 இன்னும், என்னையும் சுகவாசிகளான பொய்ப்பித்தவர்களையும் விட்டுவிடுவீராக! (நான் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்.) இன்னும், அவர்களுக்கு கொஞ்ச (கால)ம் அவகாசம் தருவீராக!
73:12 நிச்சயமாக (கை, கால்களில் போடப்படுகிற) விலங்குகளும் சுட்டெரிக்கிற நரகமும் நம்மிடம் (அவர்களுக்காக) உண்டு.
73:13 இன்னும், தொண்டையில் சிக்கிக் கொள்கிற உணவும் வலிமிகுந்த தண்டனையும் உண்டு.
73:14 பூமியும் மலைகளும் குலுங்குகிற நாளில் (அவர்களுக்கு அந்த தண்டனைகள் கொடுக்கப்படும்.) இன்னும், (அந்நாளில்) மலைகள் தூவப்படுகிற மணலாக ஆகிவிடும்.
73:15 நிச்சயமாக நாம் (உங்களில் யார் நம்பிக்கை கொண்டார், யார் நிராகரித்தார் என்று என்னிடம்) உங்களைப் பற்றி சாட்சி கூறுகின்ற ஒரு தூதரை உங்களிடம் அனுப்பினோம், ஃபிர்அவ்னுக்கு ஒரு தூதரை நாம் அனுப்பியது போன்று.
73:16 ஆக, ஃபிர்அவ்ன் அந்த தூதருக்கு மாறுசெய்தான். ஆகவே, மிகக் கடுமையாக நாம் அவனை பிடித்தோம். (-அவனை கடுமையான தண்டனையைக் கொண்டு தண்டித்து அழித்தோம்.)
73:17 ஆக, நீங்கள் (அல்லாஹ்வை) நிராகரித்தால், பிள்ளைகளை வயோதிகர்களாக ஆக்கிவிடுகிற ஒரு நாளை எப்படி பயப்படுவீர்கள்?
73:18 வானம் அ(ன்றைய தினத்)தில் (துண்டு துண்டாக தெரித்து) பிளந்து விடும். அவனது வாக்கு கண்டிப்பாக நிறைவேறக்கூடியதாக இருக்கிறது.
73:19 நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். ஆகவே, யார் (மறுமையின் வெற்றியை) நாடுவாரோ அவர் தன் இறைவன் (உடைய மன்னிப்பு இன்னும் பொருத்தத்தின்) பக்கம் (சேர்த்துவைக்கிற நல்லறங்கள் உடைய) ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.