>

உமர் ஷரீஃப் — 561

66:8 நம்பிக்கையாளர்களே! உண்மையாக பாவமன்னிப்புக் கேட்டு (திருந்தி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்! உங்கள் இறைவன் உங்களை விட்டும் உங்கள் பாவங்களை போக்கிவிடுவான். சொர்க்கங்களில் உங்களை பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அந்நாளில் அல்லாஹ் நபியையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் கேவலப்படுத்த மாட்டான். (கைவிட்டு விடமாட்டன். மாறாக, அவர்களை உயர்த்துவான்.) அவர்களின் ஒளி அவர்களுக்கு முன்னும் அவர்களின் வலப்பக்கங்களிலும் விரைந்து வரும். “எங்கள் இறைவா! எங்கள் ஒளியை (சொர்க்கம் வரை) எங்களுக்கு முழுமையாக்கு! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய்” என்று அவர்கள் (பிரார்த்தித்து) கூறுவார்கள்.

66:9 நபியே! நிராகரிப்பாளர்களிடமும், நயவஞ்சகர்களிடமும் ஜிஹாது செய்வீராக! அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வீராக! அவர்களின் தங்குமிடம் நரகம்தான். மீளுமிடங்களில் (நரகம்) மிகக் கெட்டதாகும்.

66:10 நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் நிராகரித்தவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் விவரிக்கிறான். அவர்கள் இருவரும் நமது அடியார்களில் இரு நல்ல அடியார்களுக்கு கீழ் இருந்தனர். அவ்விருவரும் அவ்விருவருக்கும் (-இரு நபிமார்களுக்கும் மார்க்கத்தில்) துரோகம் செய்தனர். ஆகவே, அவ்விருவரும் அவ்விருவரை விட்டும் அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையில் இருந்து) எதையும் தடுக்க (முடிய)வில்லை. இன்னும், (அவ்விரு பெண்களுக்கும்) கூறப்பட்டது: “(நரகத்தில்) நுழைபவர்களுடன் நீங்கள் இருவரும் நரகத்தில் நுழையுங்கள்!”

66:11 இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான். அவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “என் இறைவா! உன்னிடம் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எனக்கு அமைத்துத் தா! இன்னும், ஃபிர்அவ்னை விட்டும் அவனது செயல்களை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள்! இன்னும், அநியாயக்கார மக்களை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள்!”

66:12 இன்னும், இம்ரானின் மகள் மர்யமை (அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான்). அவள் தனது மறைவிடத்தை பேணி பாதுகாத்துக்கொண்டாள். ஆகவே, நாம் அதில் (-அவளுடைய மேல் சட்டையின் முன் புறத்தில்) நாம் படைத்த உயிரிலிருந்து ஊதினோம். இன்னும், அவள் தனது இறைவனின் வாக்கியங்களையும் அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். இன்னும், அவள் மிகவும் பணிந்தவர்களில் உள்ளவளாக இருந்தாள்.