>

உமர் ஷரீஃப் — 560

66:1 நபியே! உமது மனைவிகளின் பொருத்தத்தை நாடியவராக, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் (உமக்கு) விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.

66:2 (இது போன்ற) உங்கள் சத்தியங்களை முறிப்பதை(யும் அதற்கு பரிகாரம் செய்வதையும்) அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான். அல்லாஹ்தான் உங்கள் எஜமானன். அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.

66:3 இன்னும், நபி தனது மனைவிமார்களில் சிலரிடம் ஒரு பேச்சை இரகசியமாக பேசியபோது, ஆக, அவள் அதை (மற்றொரு மனைவியிடம்) அறிவித்தாள். ஆனால், அல்லாஹ் அவருக்கு (-தனது நபிக்கு) அதை வெளிப்படுத்தியபோது அதில் (-அந்த பேச்சில்) சிலவற்றை அவர் (அவளுக்கு) அறிவித்தார்; சிலவற்றை (அறிவிக்காமல்) புறக்கணித்துவிட்டார். ஆக, அவர் அவளுக்கு அதை (-அந்த சிலவற்றை) அறிவித்தபோது, “யார் உமக்கு இதை அறிவித்தார்” என்று அவள் கூறினாள். “நன்கறிபவன், ஆழ்ந்தறிபவன் (ஆகிய அல்லாஹ்) எனக்கு அறிவித்தான்” என்று அவர் கூறினார்.

66:4 நீங்கள் இருவரும் (பாவமன்னிப்புக் கேட்டு திருந்தி,) அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட்டால் அதுதான் நல்லது. ஏனெனில், திட்டமாக உங்கள் இருவரின் உள்ளங்களும் (நபிக்குப் பிடிக்காத ஒன்றின் பக்கம்) சாய்ந்து விட்டன. நீங்கள் இருவரும் அவருக்கு எதிராக (உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு) உதவினால் (அதனால் நபிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் அவருக்குப் பாதுகாவலன் (உதவியாளன் - நண்பன்) ஆவான். இன்னும், ஜிப்ரீலும் நல்ல முஃமின்களும் வானவர்களும் இதற்குப் பின்னர் (-அல்லாஹ்வின் உதவிக்குப் பின்னர் அவருக்கு) உதவியாளர்கள் ஆவார்கள்.

66:5 (நபியின் மனைவிமார்களே!) அவர் உங்களை விவாகரத்து (-தலாக்) செய்துவிட்டால் உங்களை விட சிறந்தவர்களான மனைவிகளை - (அல்லாஹ்விற்கும் நபிக்கும்) முற்றிலும் பணியக்கூடிய, (அல்லாஹ்வையும் நபியையும்) நம்பிக்கை கொள்ளக்கூடிய, கீழ்ப்படியக்கூடிய, அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய, வணக்க வழிபாடு செய்யக்கூடிய, நோன்பு நோற்கக்கூடிய பெண்களை அவருக்கு அவன் (உங்களுக்கு) பகரமாக வழங்குவான். அவர்களில் கன்னி கழிந்தவர்களும் இருப்பார்கள், கன்னிகளும் இருப்பார்கள்.

66:6 நம்பிக்கையாளர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் நரகத்தை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மக்களும் கற்களும் ஆவார்கள். கடுமையானவர்களான மிகவும் வலிமைமிக்கவர்களான வானவர்கள் அவற்றின் மீது இருப்பார்கள். அல்லாஹ்விற்கு அவன் அவர்களுக்கு ஏவியதில் அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் எதை ஏவப்பட்டார்களோ அதையே செய்வார்கள்.

66:7 நிராகரித்தவர்களே! இன்று நீங்கள் (உங்கள் பாவங்களுக்கு) காரணம் கூறாதீர்கள். (வருத்தம் தெரிவிக்காதீர்கள்!) நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்.