>

உமர் ஷரீஃப் — 548

59:17 ஆக, அவ்விருவரின் முடிவானது, “நிச்சயமாக அவ்விருவரும் நரகத்தில் இருப்பார்கள், அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள்” என்பதாக ஆகிவிடும். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்.

59:18 நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! ஓர் ஆன்மா, அது (தனது) மறுமைக்காக எதை முற்படுத்தி இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளட்டும். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.

59:19 அல்லாஹ்வை மறந்தவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள். அதனால் அவர்களுக்கு அவர்களையே அவன் மறக்கச் செய்துவிட்டான். அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள்.

59:20 நரக வாசிகளும் சொர்க்க வாசிகளும் சமமாக மாட்டார்கள். சொர்க்க வாசிகள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.

59:21 இந்த குர்ஆனை நாம் ஒரு மலையின் மீது இறக்கி இருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் முற்றிலும் பணிந்ததாகவும் பிளந்து விடக்கூடியதாகவும் அதை நீர் கண்டிருப்பீர். இந்த உதாரணங்கள், இவற்றை மக்களுக்கு நாம் விவரிக்கிறோம், அவர்கள் சிந்திப்பதற்காக.

59:22 அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன். அவன்தான் பேரருளாளன், பேரன்பாளன் (மகா கருணையும் விசாலமான இரக்கமும் உடையவன்).

59:23 அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்தான்) உண்மையான அரசன், மகா தூயவன், ஈடேற்றம் அளிப்பவன், அபயமளிப்பவன், பாதுகாப்பவன், மிகைத்தவன், அடக்கி ஆள்பவன், பெருமைக்குரியவன் ஆவான். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மகா பரிசுத்தமானவன்.

59:24 அவன்தான் அல்லாஹ். படைப்பவன், உருவாக்குபவன், உருவம் அமைப்பவன். மிக அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன. வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவை அவனையே துதித்து தொழுகின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.