உமர் ஷரீஃப் — 537
56:77 நிச்சயமாக இது கண்ணியமான குர்ஆனாகும்,
56:78 பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.
56:79 மிகவும் பரிசுத்தமான (வான)வர்களைத் தவிர இதைத் தொடமாட்டார்கள்.
56:80 (இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.
56:81 ஆக, இந்த பேச்சை (-குர்ஆனை) நீங்கள் அலட்சியம் செய்(து, இதில் உள்ள உண்மை அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பிக்)கிறீர்களா?
56:82 இன்னும், நிச்சயமாக நீங்கள் (இதை) பொய்ப்பிப்பதையே (அல்லாஹ் உங்கள் மீது செய்த அருள்களுக்கு) உங்கள் நன்றியாக ஆக்கிக் கொண்டீர்களா?
56:83 ஆக, (மரணிப்பவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது,
56:84 நீங்கள் அந்நேரத்தில் (அவருக்கு அருகில் இருந்து கொண்டு அவரது நிலையை உங்கள் கண்களால்) பார்க்கிறீர்கள். (ஆனாலும் உங்களால் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை.)
56:85 நாம் (-நமது வானவர்கள்) உங்களை விட அவருக்கு மிக சமீபமாக இருக்கிறோம். என்றாலும், நீங்கள் பார்க்க முடியாது. (உயிரை வாங்கும்போது வானவர்கள் அருகில் இருந்தும் அவர்களை மனிதர்களால் பார்க்க முடியாது.)
56:86 ஆக, நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,
56:87 (அந்த உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதை (-அந்த உயிரை) நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமே?
56:88 ஆக, (மரணித்தவர் அல்லாஹ்விற்கு) சமீபமான (நல்ல)வர்களில் உள்ளவராக இருந்தால்,
56:89 (அவருக்கு மறுமையில் மகத்தான) அருளும் (நல்ல) உணவும் (உயர்ந்த நறுமணமும்) “நயீம்” என்ற இன்பம் நிறைந்த சொர்க்கமும் உண்டு.
56:90 ஆக, (இறந்தவர்) வலது பக்கம் உடையவர்களில் உள்ளவராக இருந்தால்,
56:91 (ஓ நல்லவரே!) வலது பக்கம் உடையவர்களில் உள்ள உமக்கு ஸலாம் (பாதுகாப்பும் ஈடேற்றமும்) உண்டாகுக!
56:92 ஆக, அவர் வழிகெட்டவர்களில், பொய்ப்பித்தவர்களில் உள்ளவர்களாக இருந்தால்,
56:93 கடுமையாக கொதிக்கின்ற சுடுநீரின் விருந்தும்,
56:94 நரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கூலியாக இருக்கும்).
56:95 நிச்சயமாக இதுதான் மிக உறுதியான உண்மையாகும்.
56:96 ஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!
57:1 வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
57:2 வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் உயிர்கொடுக்கிறான்; மரணிக்க வைக்கிறான். இன்னும், அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
57:3 அவன்தான் முதலாமவன்; இறுதியானவன்; மேலோங்கியவன்; மறைந்தவன். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.