>

உமர் ஷரீஃப் — 531

54:50 (“ஆகு” என்று நாம் கூறுகின்ற) ஒற்றை வார்த்தையைத் தவிர நமது கட்டளை இல்லை, (நாம் எதை கட்டளையிட்டோமோ அது உடனே ஆகிவிடும்) கண் சிமிட்டுவதைப் போல்.

54:51 (உங்களைப் போன்ற) உங்கள் சக கொள்கையுடையவர்களை (இதற்கு முன்னர்) நாம் திட்டவட்டமாக அழித்தோம். ஆக, நல்லுபதேசம் பெறுபவர் யாரும் இருக்கிறாரா?

54:52 அவர்கள் செய்த எல்லா விஷயங்களும் (வானவர்கள் எழுதிய செயல்) ஏடுகளில் (பதியப்பட்டு) உள்ளன.

54:53 இன்னும், (அவர்கள் செய்த) சிறியவை, பெரியவை (என) எல்லா (செயல்களு)ம் (அதில்) எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.)

54:54 நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கத்து தோட்டங்களிலும் நதிகளிலும் இருப்பார்கள்.

54:55 (வீண் பேச்சுகள் அற்ற) உண்மையான பேச்சுகளுடைய (பொய்யும் பாவமுமற்ற) சபையில், பேராற்றலுடையவனான (மகா வல்லமைமிக்கவனான) பேரரசனுக்கு அருகில் இருப்பார்கள்.

55:1 பேரருளாளன் (-பெரும் கருணையும் இறக்கமும் உடையோன்),

55:2 குர்ஆனை (உங்களுக்கு) கற்பித்தான்;

55:3 மனிதனைப் படைத்தான்.

55:4 அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்.

55:5 சூரியனும் சந்திரனும் (அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்ட) ஒரு கணக்கின் அடிப்படையில் (ஓடிக்கொண்டு) இருக்கின்றன.

55:6 (தண்டுகள் இல்லாத) செடிகொடிகளும் (தடித்த தண்டுகளை உடைய) மரங்களும் (அவற்றை படைத்த இறைவனாகிய அல்லாஹ்விற்கு) சிரம் பணிகின்றன.

55:7 இன்னும், வானம், அதை (பூமிக்கு மேல்) உயர்த்தினான். இன்னும், தராசை – நீதத்தை - பின்பற்றப்பட வேண்டிய கட்டாய சட்டமாக அமைத்தான்.

55:8 தராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (நீதத்தை மீறாதீர்கள்! எவர் மீதும் அநியாயம் செய்யாதீர்கள்!)

55:9 நிறுவையை (தராசின் நாக்கை சரியாக நடுவில்) நீதமாக நிறுத்துங்கள்! இன்னும், தராசில் (பொருள்களை குறைத்து மக்களுக்கு) நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள்.

55:10 இன்னும், பூமி - அதை படைப்பினங்களுக்காக (-அவை வாழ்வதற்காக) அவன் அமைத்தான்.

55:11 அதில் பழங்களும் குலைகளுடைய பேரீச்ச மரங்களும் இருக்கின்றன.

55:12 தொலிகளையும் வைக்கோலையும் உடைய தானியங்களும் (இதர) உணவு(ப் பொருள்)களும் அதில் இருக்கின்றன.

55:13 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:14 சுட்ட களிமண்ணைப் போல் உள்ள, சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை அவன் படைத்தான்.

55:15 இன்னும், நெருப்பின் (சிவப்பும் மஞ்சளும் கலந்த) நடு ஜுவாலையில் இருந்து ஜின்களைப் படைத்தான்.

55:16 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:17 சூரியன் தோன்றுகிற இரு இடங்களுடைய அதிபதி; இன்னும், சூரியன் மறைகிற இரு இடங்களுடைய அதிபதி அவன்.

55:18 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்?