உமர் ஷரீஃப் — 515
48:29 முஹம்மத் (அவர் மீது அல்லாஹ்வின் அருள் நிலவுக!) அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில் குனிந்து) ருகூஃ செய்தவர்களாக; (சிரம் பணிந்து) சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூது (-சிரம் பணிந்து வணங்குவது) உடைய அடையாளமாக இருக்கும். இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும். இன்னும், இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும், அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. அது தனது தண்டின் மீது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (இப்படித்தான் நம்பிக்கையாளர்களை) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்). நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்த அவர்களுக்கு அல்லாஹ் (தனது) மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்தான்.
49:1 நம்பிக்கையாளர்களே! (கருத்துக் கூறுவதில், முடிவெடுப்பதில்) அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முன்பாக நீங்கள் முந்தாதீர்கள்! (-அவசரப் படாதீர்கள்!) இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
49:2 நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேல் உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்! இன்னும், உங்களில் சிலர், சிலருக்கு முன் உரக்கப் பேசுவதைப் போல் அவருக்கு முன் பேசுவதில் உரக்கப் பேசாதீர்கள்! நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் உங்கள் அமல்கள் பாழாகிவிடாமல் இருப்பதற்காக (அவருடன் மிக மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்!).
49:3 நிச்சயமாக எவர்கள் தங்கள் குரல்களை அல்லாஹ்வின் தூதருக்கு அருகில் தாழ்த்திக் கொள்கிறார்களோ - அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுடைய உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் சோதித்து (தேர்வு செய்து) இருக்கிறான். அவர்களுக்கு (அல்லாஹ்வின்) மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.
49:4 நிச்சயமாக (நீர் தங்கி இருக்கிற) அறைகளுக்குப் பின்னால் இருந்து உம்மை சத்தமிட்டு அழைப்பவர்கள் - அவர்களில் அதிகமானவர்கள் (உங்கள் கண்ணியத்தை) புரியமாட்டார்கள்.