>

உமர் ஷரீஃப் — 496

44:1 ஹா மீம்.

44:2 தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!

44:3 நிச்சயமாக நாம் அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய) ஓர் இரவில் இதை இறக்கினோம். நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக இருந்தோம்.

44:4 இதில்தான் ஞானமிக்க எல்லாக் காரியங்களும் முடிவு செய்யப்படுகின்றன,

44:5 நம்மிடமிருந்து வருகின்ற கட்டளையின்படி. நிச்சயமாக நாம் (அவரை) தூதராக அனுப்பக் கூடியவர்களாகவே இருந்தோம்,

44:6 (அவர்) உமது இறைவனின் ஓர் அருளாக இருக்கவேண்டும் என்பதற்காக. நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.

44:7 வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் அதிபதி(யிடமிருந்து அவர் அருளாக அனுப்பப்பட்டு இருக்கிறார்). நீங்கள் (உண்மைகளை) உறுதியாக நம்பக் கூடியவர்களாக இருந்தால் (இதை உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்)!

44:8 அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான்; அவன்தான் உங்கள் இறைவனும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்.

44:9 மாறாக, அவர்கள் (இந்த வேதத்தை நம்பிக்கை கொள்ளாமல்) சந்தேகத்தில் இருக்கிறார்கள்; (வீண் கேளிக்கைகளில்) விளையாடுகிறார்கள்.

44:10 ஆக, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருகின்ற நாளை எதிர்பார்ப்பீராக!

44:11 அது மக்களை சூழ்ந்துகொள்ளும். இது துன்புறுத்தும் தண்டனையாகும்.

44:12 “எங்கள் இறைவா! எங்களை விட்டு தண்டனையை நீக்கி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் (உன்னை நம்பிக்கை கொண்ட) நம்பிக்கையாளர்கள் ஆவோம்” (என்று அழுது பிரலாபிப்பார்கள்).

44:13 (தண்டனை வந்த பின்னர்) நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி பலன் தரும்? திட்டமாக அவர்களிடம் தெளிவான ஒரு தூதர் வந்தார்.

44:14 பிறகு, அவர்கள் அவரை விட்டு விலகி சென்று விட்டனர். இன்னும், (பிற மனிதர்களால் இந்த வேதத்தை) கற்பிக்கப்பட்டவர், பைத்தியக்காரர் என்று (அவரைப் பற்றி) கூறினார்கள்.

44:15 நிச்சயமாக நாம் இந்த தண்டனையை கொஞ்சம் நீக்குவோம். (ஆனால்,) நிச்சயமாக நீங்கள் (உங்கள் வழிகேட்டின் பக்கமே) திரும்புவீர்கள்.

44:16 பெரிய தாக்குதலாக (அவர்களை) நாம் தாக்குகின்ற நாளில் (அவர்களிடம்) நிச்சயமாக நாம் பழி வாங்குவோம்.

44:17 இவர்களுக்கு முன்னர் நாம் ஃபிர்அவ்னுடைய மக்களை திட்டவட்டமாக சோதித்தோம். இன்னும், அவர்களிடம் கண்ணியமான ஒரு தூதர் வந்தார்.

44:18 (அவர் கூறினார்:) “நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.”