>

உமர் ஷரீஃப் — 495

43:74 நிச்சயமாக குற்றவாளிகள் நரகத்தின் தண்டனையில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.

43:75 அவர்களை விட்டும் தண்டனை குறைக்கப்படாது. இன்னும், அவர்கள் அ(ந்த தண்டனைகள் குறைக்கப்படும் என்ப)தில் நம்பிக்கை இழந்திருப்பார்கள்.

43:76 நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை. எனினும், அவர்கள்தான் முற்றிலும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.

43:77 இன்னும், “மாலிக்கே! உமது இறைவன் எங்களை அழித்துவிடட்டும்!” என்று கூறி அவர்கள் (நரகத்தின் காவலாளியான மாலிக்கை) அழைப்பார்கள். அவர் (அப்போது உடனே பதில் தராமல், ஆயிரம் ஆண்டுகள் கழித்து பதில்) கூறுவார்: “நீங்கள் (இதில் நிரந்தரமாக) தங்குவீர்கள்! (உங்களுக்கு இங்கு மரணமில்லை)”

43:78 திட்டவட்டமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். என்றாலும், உங்களில் அதிகமானவர்கள் இந்த உண்மையை வெறுக்கிறீர்கள்.

43:79 (இந்த உண்மைக்கு எதிராக) ஒரு காரியத்தை அவர்கள் முடிவு செய்து விட்டார்களா? நிச்சயமாக நாங்கள்தான் (அவர்களை இழிவுபடுத்தும் காரியத்தை) முடிவு செய்யப்போகிறோம்.

43:80 நாம் அவர்களின் இரகசிய பேச்சையும் அவர்கள் கூடி (ஒன்றாக)ப் பேசுவதையும் செவியுற மாட்டோம் என்று அவர்கள் எண்ணுகிறார்களா? ஏன் இல்லை, நமது (வானவத்) தூதர்கள் அவர்களிடம் இருந்தவர்களாக (அவர்கள் தனிமையில்; அல்லது, சபையில் பேசுகின்ற அனைத்தையும்) பதிவு செய்கிறார்கள்.

43:81 (நபியே!) கூறுவீராக! “ரஹ்மான் – பேரருளாளனாகிய அல்லாஹ்விற்கு குழந்தை இருக்குமேயானால் (அதை) வணங்குபவர்களில் முதலாமவனாக நான் இருந்திருப்பேன்.”

43:82 வானங்கள் இன்னும் பூமியின் அதிபதி, அர்ஷுடைய அதிபதி(யாகிய அவன்) அவர்கள் வர்ணிக்கின்ற (இந்த பொய்யான) வர்ணிப்புகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன்.

43:83 ஆகவே, (நபியே!) அவர்களை விடுங்கள்! அவர்கள் (தங்கள் பொய்களில்) மூழ்கட்டும், (தங்கள் உலக வாழ்க்கையில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்படுகின்ற அவர்களது (தண்டனையின்) நாளை அவர்கள் சந்திப்பார்கள்.

43:84 அவன் வானத்திலும் வணங்கப்படும் இறைவனாக, பூமியிலும் வணங்கப்படும் இறைவனாக இருக்கிறான். அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.

43:85 வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி எவனுக்கு உரியதோ அ(ந்த இறை)வன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்தானவன் ஆவான். இன்னும், அவனிடமே மறுமையின் அறிவு இருக்கிறது. இன்னும், அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

43:86 அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு - அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக - சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல், சிபாரிசை அல்லாஹ்விடம் மட்டும் எதிர்பார்த்து இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (வானவர்களும் நல்லவர்களும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு) சிபாரிசு செய்வார்கள். (அவர்களை வணங்கியவர்களுக்கு அல்ல.)

43:87 அவர்களை யார் படைத்தான் என்று நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (அப்படி இருக்க) அவர்கள் (அவனை வணங்குவதில் இருந்து) அவர்கள் எப்படி திருப்பப்படுகிறார்கள்!

43:88 இன்னும், “என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள் ஆவார்கள்” என்ற அவருடைய (-தூதருடைய) கூற்றின் அறிவும் அவனிடம்தான் இருக்கிறது.

43:89 ஆகவே, (நபியே!) அவர்களை புறக்கணிப்பீராக! இன்னும், (அவர்களுக்கு) ஸலாம் கூறிவிடுவீராக! ஆக, அவர்கள் விரைவில் (அவர்களின் தண்டனையை) அறிவார்கள்.