>

உமர் ஷரீஃப் — 491

43:23 இவ்வாறு, உமக்கு முன்னர் நாம் எச்சரிப்பாளர் எவரையும் ஓர் ஊரில் அனுப்பியபோதெல்லாம், அந்த ஊரில் உள்ள (செல்வந்தர்களாகிய) சுகவாசிகள் - “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)” என்றுதான் கூறி இருக்கிறார்கள். (ஆக, நபியே! முன்சென்ற மக்கள் தங்களது தூதர்களுக்கு கூறியதைத்தான் உமது மக்களும் கூறுகிறார்கள்.)

43:24 (நமது தூதர்) கூறினார்: “நீங்கள் உங்கள் மூதாதைகளை எதன்மீது கண்டீர்களோ அதைவிட மிகச் சிறந்த நேர்வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா (நீங்கள் என்னைப் பின்பற்ற மறுப்பீர்கள்)?” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ (அது எதுவாக இருந்தாலும் சரி) அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்போம்.”

43:25 ஆகவே, அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். ஆக, பொய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே!) நீர் கவனிப்பீராக!

43:26 இன்னும், (நபியே!) தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக: “நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும் நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்,”

43:27 “என்னைப் படைத்த (இறை)வனைத் தவிர. (அவனை மட்டுமே நான் வணங்குவேன்.) ஆக, நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”

43:28 இன்னும், இதை (-அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை என்ற தூய கொள்கையை) தனது சந்ததிகளில் நீடித்து நிற்கின்ற ஒரு (கொள்கை) வாக்கியமாக அவர் ஆக்கினார், அவர்கள் (எல்லா தவறான கொள்கையிலிருந்து விலகி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக.

43:29 (இவர்களை நாம் உடனே அழிக்கவில்லை.) மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம். இறுதியாக, உண்மையான வேதம் அவர்களிடம் வந்தது. இன்னும், தெளிவான தூதரும் அவர்களிடம் வந்தார்.

43:30 இன்னும், அவர்களிடம் உண்மையான வேதம் (அல்குர்ஆன்) வந்தபோது, “இது சூனியம்” என்றும் “நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கக் கூடியவர்கள்” என்றும் கூறினார்கள்.

43:31 இன்னும், “இந்த குர்ஆன் (மக்கா இன்னும் தாயிஃப் ஆகிய) இந்த இரண்டு ஊர்களில் உள்ள (வசதி படைத்த) ஒரு பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்க வேண்டாமா!” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

43:32 அவர்கள் உமது இறைவனின் அருளை (தமது விருப்பப்படி) பங்கு வைக்கின்றனரா? நாம்தான் அவர்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்வாதாரத்தை இவ்வுலக வாழ்க்கையில் பங்குவைத்தோம். அவர்களில் சிலரை சிலருக்கு மேலாக (செல்வத்திலும் பதவியிலும்) தகுதிகளால் உயர்த்தினோம். காரணம், அவர்களில் சிலர் சிலரை (தங்களுக்கு) பணியாளராக எடுத்துக் கொள்வதற்காக. (இப்படி நாம் ஆக்கியதால் ஒருவர் மூலமாக ஒருவர் பயன் பெறுகிறார்.) உமது இறைவனின் (சொர்க்கம் என்ற மறுமை) அருள்தான் (இவ்வுலக செல்வங்களில்) அவர்கள் எதை சேகரிக்கிறார்களோ அதைவிட மிகச் சிறந்ததாகும்.

43:33 மக்கள் எல்லாம் (குஃப்ர் - நிராகரிப்பில் மாறிவிடுவார்கள், நிராகரிக்கின்ற) ஒரே ஒரு சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்று இல்லையெனில் ரஹ்மானை நிராகரிப்பவர்களுக்கு - அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன முகடுகளையும் ஏணிகளையும் நாம் ஆக்கியிருப்போம். அவற்றின் மீது (-அந்த ஏணிகளின் மீது) அவர்கள் (தங்கள் வீட்டு மாடிகளுக்கு) ஏ(றி மக்கள் முன் தோன்)றுவார்கள்.