உமர் ஷரீஃப் — 490
43:11 இன்னும், அவன் வானத்தில் இருந்து மழையை ஓர் அளவோடு இறக்கினான். ஆக, இறந்து (-காய்ந்து) போன பூமியை நாம் அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறுதான் நீங்கள் (இறந்த பின்னர் பூமியில் இருந்து மீண்டும் நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு) வெளியாக்கப்படுவீர்கள்.
43:12 இன்னும், அவன் (படைப்புகளில் உள்ள) ஜோடிகள் எல்லாவற்றையும் படைத்தான் (-படைப்புகள் எல்லாவற்றையும் ஆண், பெண் என்று ஜோடி ஜோடியாகப் படைத்தான்). இன்னும், கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் எதில் பயணம் செய்வீர்களோ அதை உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தான்.
43:13 அவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்; பிறகு அவற்றின் மீது நீங்கள் ஸ்திரமாக அமரும்போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்; “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.”
43:14 “இன்னும், நிச்சயமாக நாங்கள் (எங்கள் மரணத்திற்குப் பின்) எங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்” என்று நீங்கள் கூறுவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த வாகனங்களை ஏற்படுத்திக் கொடுத்தான்).
43:15 இன்னும், அவனது அடியார்களில் சிலரை (-வானவர்களை) அவர்கள் அவனுக்கு குழந்தைகளாக ஆக்கிவிட்டனர். நிச்சயமாக மனிதன் மிகத் தெளிவான மகா நன்றி கெட்டவன் ஆவான்.
43:16 அவன், தான் படைத்தவற்றில் பெண் பிள்ளைகளை (தனக்கு) எடுத்துக் கொண்டானா, உங்களுக்கு ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்(துக்கொடுத்)தானா?
43:17 அவர்களில் ஒருவருக்கு - அவர் ரஹ்மானுக்கு எதை தன்மையாக விவரித்தாரோ அதைக் கொண்டு - நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருப்பாக மாறிவிடுகிறது. இன்னும், அவர் துக்கப்படுகிறார். (இணைவைக்கின்ற மனிதன் தனக்கு பெண் பிள்ளையை விரும்புவதில்லை. ஆனால், அல்லாஹ்விற்கு பெண் பிள்ளைகள் இருப்பதாக கற்பனை செய்கிறான்.)
43:18 யார் ஆபரணங்களில் (அவை அணிவிக்கப்பட்டு) வளர்க்கப்படுகிறாரோ, இன்னும் அவர் வாதிப்பதில் தெளிவற்றவராக இருக்கிறாரோ அவரையா அல்லாஹ் தனக்கு பிள்ளைகளாக எடுத்துக்கொள்வான்? (பலவீனமான படைப்பாகிய பெண்களையா அல்லாஹ்விற்கு பிள்ளைகள் என்று கூறுகிறீர்கள்?)
43:19 இன்னும், ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களை (அல்லாஹ்வின்) பெண்(பிள்ளை)களாக இவர்கள் ஆக்கிவிட்டனர். அ(ந்த வான)வர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் (அங்கு பிரசன்னமாகி இருந்து) பார்த்தார்களா? (வானவர்களை பெண்கள் என்று கூறிய) இவர்களின் (இந்த) சாட்சி பதியப்படும். இன்னும், (அது பற்றி மறுமையில்) இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
43:20 இவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் நாடியிருந்தால் நாம் அவர்களை (-அந்த சிலைகளை) வணங்கியிருக்க மாட்டோம்.” இவர்களுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை. இவர்கள் கற்பனையாக பேசுகிறார்களே தவிர (உண்மை பேசுபவர்கள்) இல்லை.
43:21 (இவர்களின் கூற்றுகளுக்கு ஆதாரமாக) இதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோமா? ஆக, அவர்கள் அதை உறுதியாக பிடித்திருக்கிறார்களா? (அதன்படி செயல்படுகிறார்களா? அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?)
43:22 மாறாக, அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகள் மீதே வழி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)”