உமர் ஷரீஃப் — 469
40:17 இன்று எல்லா ஆன்மாவுக்கும் அவை செய்ததற்கு பதிலாக கூலி கொடுக்கப்படும். இன்று (யார் மீதும்) அறவே அநியாயம் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிக விரைவானவன் ஆவான்.
40:18 இன்னும், நெருங்கி வரக்கூடிய (மறுமை) நாளைப் பற்றி அவர்களை நீர் எச்சரிப்பீராக! உள்ளங்கள் (பயத்தால்) தொண்டைகளுக்கு அருகில் வந்துவிடும்போது அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த அநியாயக்காரர்களுக்கு நண்பர் எவரும் இருக்கமாட்டார். (பரிந்துரை) ஏற்றுக்கொள்ளப்படும்படியான பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்.
40:19 கண்களின் மோசடிகளையும் நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிவான்.
40:20 இன்னும், அல்லாஹ் உண்மையை (நீதமான தீர்ப்பை)த்தான் தீர்ப்பளிக்கிறான். அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
40:21 இவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட (உடல்) வலிமையால் மிக பலசாலிகளாகவும் பூமியில் (-மாடமாளிகைகள், தொழிற்சாலைகள் போன்ற) அடையாளங்களால் மிக அதிகமானவர்களாகவும் இருந்தார்கள். ஆக, அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான். அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இருக்கவில்லை.
40:22 அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் - அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள். ஆக, அவர்கள் நிராகரித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களை தண்டித்தான். நிச்சயமாக அவன் வலிமை மிக்கவன், தண்டிப்பதில் கடுமையானவன்.
40:23 திட்டவட்டமாக மூஸாவை நமது அத்தாட்சிகளுடன் இன்னும் தெளிவான ஆதாரத்துடன் அனுப்பினோம்,
40:24 ஃபிர்அவ்ன், ஹாமான் இன்னும் காரூனிடம் (மூஸாவை அனுப்பினோம்). ஆக, அவர்கள் (அவரை) சூனியக்காரர், பெரும் பொய்யர் என்று கூறினார்கள்.
40:25 ஆக, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டுவந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்(பிள்ளை)களை வாழவிடுங்கள்!” (இத்தகைய அநியாயம் செய்கிற) நிராகரிப்பவர்களின் சூழ்ச்சிகள் (எல்லாம்) வழிகேட்டில் தவிர இல்லை.