>

உமர் ஷரீஃப் — 440

35:45 அல்லாஹ் மக்களை அவர்கள் செய்தவற்றுக்காக தண்டிப்பதாக இருந்தால் அதன் மேற்பரப்பில் எந்த ஓர் உயிரினத்தையும் அவன் விட்டிருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை அவன் பிற்படுத்தி வைக்கிறான். ஆக, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் (அவர்கள் அவனது தண்டனையை விட்டும் தப்பிக்க முடியாது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை உற்றுநோக்கியவனாக இருக்கிறான்.

36:1 யா சீன்.

36:2 ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக!

36:3 நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் இருக்கிறீர்.

36:4 நேரான பாதையின் மீது இருக்கிறீர்.

36:5 மிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் (இது.)

36:6 ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இந்த வேதம் அருளப்பட்டது). அவர்களின் மூதாதைகள் (இதற்கு முன்னர் இறைத்தூதர்களால்) எச்சரிக்கப்படவில்லை. ஆகவே, அவர்கள் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள்.

36:7 அவர்களில் அதிகமானவர்கள் மீது (அல்லாஹ்வின் தண்டனையின்) வாக்கு திட்டவட்டமாக உறுதியாகிவிட்டது. ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

36:8 நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துகளில் அரிகண்டங்களை ஏற்படுத்தி விட்டோம். அவை (அவர்களின்) தாடைகள் வரை இருக்கின்றன. ஆகவே, அவர்கள் (தங்கள் தலைகளை எப்போதும்) உயர்த்தியவர்களாக இருக்கிறார்கள்.

36:9 அவர்களுக்கு முன்னர் ஒரு தடுப்பையும் அவர்களுக்கு பின்னர் ஒரு தடுப்பையும் நாம் ஆக்கினோம். ஆகவே, நாம் அவர்க(ளின் பார்வைக)ளை மறைத்து விட்டோம் (-குருடாக்கி விட்டோம்). ஆகவே, அவர்கள் பார்க்கமாட்டார்கள்.

36:10 நீர் அவர்களை எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு (இரண்டும்) சமம் தான். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

36:11 நீர் எச்சரிப்ப(து பயன் தருவ)தெல்லாம் இந்த வேதத்தை பின்பற்றி மறைவில் ரஹ்மானை பயந்தவருக்குத்தான். ஆகவே, அவருக்கு மன்னிப்பையும் கண்ணியமான கூலியையும் நற்செய்தி கூறுவீராக!

36:12 நிச்சயமாக நாம்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறோம். அவர்கள் முன்னர் செய்தவற்றையும் (நன்மைகளின் பக்கம் அவர்கள் செல்லும்போது) அவர்களின் காலடிச் சுவடுகளையும் நாம் பதிவு செய்வோம். எல்லாவற்றையும் நாம் தெளிவான பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம்.