உமர் ஷரீஃப் — 437
35:19 குருடரும் பார்வையுடையவரும் சமமாக மாட்டார்.
35:20 இருள்களும் வெளிச்சமும் (சமமாகாது.)
35:21 நிழலும் வெயிலும் (சமமாகாது.)
35:22 உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவரை செவியுற வைப்பான். மண்ணறையில் உள்ளவர்களை செவியுற வைப்பவராக நீர் இல்லை.
35:23 நீர் இல்லை அச்சமூட்டி எச்சரிப்பவராகவே தவிர.
35:24 நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் சத்தியத்தைக் கொண்டு அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமும் இல்லை அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர் சென்றிருந்தே தவிர.
35:25 இவர்கள் உம்மை பொய்ப்பித்தால், திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்டத் தூதர்களை) பொய்ப்பித்துள்ளனர். அவர்களுடையத் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் இன்னும் பிரகாசமான வேதங்களையும் கொண்டு வந்தனர்.
35:26 பிறகு, நிராகரித்தவர்களை நான் தண்டித்தேன். ஆக, (அவர்களுக்கு) நான் ஏற்படுத்திய மாற்றம் (-எனது தண்டனை) எப்படி இருந்தது?
35:27 (நபியே!) நீர் பார்க்கவில்லையா: நிச்சயமாக அல்லாஹ் மேகத்தில் இருந்து மழையை இறக்கினான். அதன் மூலம் பலதரப்பட்ட நிறங்களை உடைய கனிகளை நாம் உற்பத்தி செய்தோம். இன்னும், மலைகளில் வெண்மையான, சிவப்பான, இன்னும், கடும் கருப்பான பாதைகள் உடையவை உள்ளன. அவற்றின் நிறங்கள் பலதரப்பட்டவையாக உள்ளன.
35:28 மக்களிலும், ஊர்வன விலங்குகளிலும், (-பூமியின் மேல் செல்லக் கூடிய பொதுவான மிருகங்களிலும், ஆடு மாடு ஒட்டகம் குதிரை போன்ற) கால்நடைகளிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் எல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
35:29 நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ, இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்தார்களோ அவர்கள் அறவே அழிந்து போகாத வியாபாரத்தை ஆசைப்படுகிறார்கள்.
35:30 (அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களின் கூலிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் தனது அருளில் இருந்து மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கும் (அவர்கள் அந்த நல்லமல்களைச் செய்தார்கள்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்.