உமர் ஷரீஃப் — 436
35:12 இரண்டு கடல்களும் சமமாகாது. இ(தன் நீரான)து மதுரமானதும், சுவையானதும் அதைக் குடிப்பதற்கு இலகுவானதும் ஆகும். (மற்ற) இதுவோ மிகவும் உவர்ப்பானதும் கசப்பானதும் ஆகும். (இவை) எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் பசுமையான (ருசியான மீன்) இறைச்சியை சாப்பிடுகிறீர்கள்; நீங்கள் அணிகின்ற ஆபரணங்களை (அவற்றிலிருந்து) உற்பத்தி செய்துகொள்கிறீர்கள். அவற்றில் (-அந்தக் கடல்களில்) கப்பல்கள் (தண்ணீரை) கிழித்துச் செல்லக்கூடியதாக பார்க்கிறீர், அவனது அருள்களிலிருந்து நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (அந்தக் கப்பல்களில் உங்களை அவன் பயணிக்க வைத்தான்).
35:13 இரவை பகலில் நுழைக்கிறான்; பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிட்ட தவணையை நோக்கி ஓடுகின்றன. (இவற்றை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கக்கூடிய) அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனை அன்றி நீங்கள் அழைப்பவர்கள்[1] (-நீங்கள் வணங்குகின்ற உங்கள் தெய்வங்கள்) ஒரு (தானிய கொட்டையின் மீதுள்ள) தொலிக்குக் கூட உரிமை பெற மாட்டார்கள்.
35:14 நீங்கள் அவர்களை அழைத்தாலும் அவர்கள் உங்கள் அழைப்பை செவியுற மாட்டார்கள். அப்படியே அவர்கள் செவியுறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு அவர்கள் பதில் தர மாட்டார்கள். இன்னும், மறுமை நாளில் நீங்கள் இணைவைத்ததை மறுத்து விடுவார்கள். ஆழ்ந்தறிபவன் (-அல்லாஹ்வைப்) போன்று உமக்கு (வேறு யாரும் இந்த சிலைகளைப் பற்றி உண்மையான செய்திகளை) அறிவிக்க முடியாது.
35:15 மக்களே! நீங்கள்தான் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்கள். அல்லாஹ் - அவன்தான் முற்றிலும் நிறைவானவன், புகழுக்குரியவன் ஆவான்.
35:16 அவன் நாடினால் உங்களை அழித்து விடுவான். இன்னும், (வேறு) ஒரு புதிய படைப்பை அவன் கொண்டு வருவான்.
35:17 அது அல்லாஹ்விற்கு சிரமமானதாக இல்லை.
35:18 பாவியான ஓர் ஆன்மா மற்றோர் (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா தனது சுமையின் பக்கம் (அதை சுமக்க வேறு ஓர் ஆன்மாவை) அழைத்தால், அதிலிருந்து (-அந்தப் பாவச்சுமையில் இருந்து) எதையும் சுமக்க முடியாது, அ(ழைக்கப்பட்ட ஆன்மாவான)து உறவினராக இருந்தாலும் சரியே (நபியே!) நீர் எச்சரிப்பதெல்லாம் தங்கள் இறைவனை மறைவில் அஞ்சுபவர்களைத்தான். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். யார் பரிசுத்தம் அடைகிறாரோ அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம் தனது நன்மைக்காகத்தான். இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது.