>

உமர் ஷரீஃப் — 435

35:4 (நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், (அது புதிதல்ல.) உமக்கு முன்னரும் பல தூதர்கள் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்கப்பட்டுள்ளனர். இன்னும், அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும்.

35:5 மக்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆகவே, உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) ஏமாற்றக் கூடியவனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை மயக்கிவிட வேண்டாம்.

35:6 நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரி ஆவான். ஆகவே, அவனை எதிரியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்! அவன் தனது கூட்டத்தார்களை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக ஆகுவதற்காகத்தான்.

35:7 எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. எவர்கள் நம்பிக்கைகொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.

35:8 ஆக, எவர் ஒருவர், அவருக்கு தனது கெட்ட செயல் அலங்கரிக்கப்பட்டு அவர் அதை அழகாக கருதினாரோ (அவர் மீது நீர் கவலைப்படாதீர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுகிறவரை வழிகெடுக்கிறான். தான் நாடுகிறவரை நேர்வழிபடுத்துகிறான். ஆகவே, அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய்விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.

35:9 அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். ஆக, அவை மேகத்தை கிளப்புகின்றன. அ(ந்த மேகத்)தை இறந்து போன (-வறண்ட) ஊருக்கு நாம் ஓட்டி வருகிறோம். ஆக, அதன் மூலம் அந்த பூமியை அது இறந்ததற்குப் பின்னர் நாம் உயிர்ப்பிக்கிறோம். இப்படித்தான் (படைப்புகள் மறுமுறை) எழுப்பப்படுவதும் நிகழும்.

35:10 யார் கண்ணியத்தை நாடுபவராக இருக்கிறாரோ (அவர் அல்லாஹ்விடம் அதைத் தேடட்டும்.) ஏனெனில், அல்லாஹ்விற்குத்தான் கண்ணியம் அனைத்தும் சொந்தமானது. அவன் பக்கம்தான் நல்ல சொற்கள் உயர்கின்றன. இன்னும், நல்ல செயல்கள் அவற்றை உயர்த்துகின்றன. கெட்ட சூழ்ச்சிகளை செய்பவர்கள் - அவர்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி - அது அழிந்து போய்விடும்.

35:11 அல்லாஹ்தான் உங்களை மண்ணிலிருந்து, பிறகு, இந்திரியத்திலிருந்து படைத்தான். பிறகு, அவன் உங்களை ஜோடிகளாக ஆக்கினான். ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை, அவள் கர்ப்பம் தரிப்பதும் இல்லை அவன் அறிந்தே தவிர. நீண்ட வயது கொடுக்கப்பட்டவருக்கு நீண்ட வயது கொடுக்கப்படுவதில்லை, இன்னும் ஒருவருடைய வயது குறைக்கப்படுவதில்லை (அவை எல்லாம்) பதிவுப் புத்தகத்தில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே.