>

உமர் ஷரீஃப் — 430

34:15 ஸபா நகர மக்களுக்கு அவர்களின் தங்குமிடத்தில் ஓர் அத்தாட்சி திட்டவட்டமாக இருக்கிறது. வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் என இரண்டு தோட்டங்கள் (அவர்களுக்கு) இருந்தன. (ஸபா வாசிகளே!) உங்கள் இறைவன் அருளிய உணவை உண்ணுங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! (உங்கள் ஊரும்) நல்ல ஊர். (உங்கள் இறைவனும்) மகா மன்னிப்பாளனாகிய இறைவன் ஆவான்.

34:16 ஆக, அவர்கள் புறக்கணித்தனர். ஆகவே, அடியோடு அரித்து செல்கிற பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பினோம். அவர்களின் இரண்டு (நல்ல) தோட்டங்களை (கசப்பான கெட்ட) துர்நாற்றமுள்ள பழங்களையும், காய்க்காத மரங்களையும், மிகக் குறைவான சில இலந்தை மரங்களையும் உடைய இரண்டு தோட்டங்களாக மாற்றிவிட்டோம்.

34:17 இது, அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்களுக்கு நாம் (இத்தகைய) கூலி கொடுத்தோம். நிராகரிப்பாளர்களைத் தவிர நாம் தண்டிப்போமா?

34:18 அவர்களுக்கு இடையிலும் நாம் அருள்வளம் புரிந்த (ஷாம் தேச) ஊர்களுக்கு இடையிலும் (ஒவ்வொரு ஊராருக்கும்) தெளிவாகத் தெரியும்படியான பல ஊர்களை நாம் ஏற்படுத்தினோம். அவற்றில் பயணத்தை நிர்ணயித்தோம் (ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சிரமமின்றி பயணிப்பதை எளிதாக்கினோம்). அவற்றில் பல இரவுகளும் பல பகல்களும் பாதுகாப்புப் பெற்றவர்களாக பயணியுங்கள்.

34:19 ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா! (எங்கள் பாதையில் உள்ள ஊர்களை இல்லாமல் ஆக்கி) எங்கள் பயணங்களுக்கு மத்தியில் தூரத்தை ஏற்படுத்து! (அப்போது அதிக பயண சாமான்களோடு செல்லும் எங்களுக்கு ஏனைய மக்களுக்கு மத்தியில் பெருமையாக இருக்கும்.)” அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்தனர். ஆக, அவர்களை (மக்களுக்கு மத்தியில் பேசப்படுகின்ற) செய்திகளாக்கி விட்டோம். அவர்களை சுக்குநூறாக கிழித்துவிட்டோம். (முற்றிலுமாக பிரித்துவிட்டோம்.) நிச்சயமாக இதில் பொறுமையாளர்களுக்கு, அதிகம் நன்றி செலுத்துபவர்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

34:20 திட்டவட்டமாக இப்லீஸ் அவர்கள் மீது தன் எண்ணத்தை உண்மையாக்கினான். ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர், நம்பிக்கை கொண்ட பிரிவினரைத் தவிர. (நம்பிக்கையாளர்கள் இப்லீஸின் வழியில் செல்ல மாட்டார்கள்.)

34:21 அவனுக்கு அவர்கள் மீது அறவே அதிகாரம் இருக்கவில்லை. இருந்தாலும் மறுமையை நம்பிக்கை கொள்பவர்களை அதில் சந்தேகத்தில் இருப்பவர்களிலிருந்து (பிரித்து வெளிப்படையாக) நாம் அறிவதற்காக (இவ்வாறு சோதித்தோம்). உமது இறைவன் எல்லாவற்றையும் கண்காணிப்பவன் ஆவான்.

34:22 (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி (தெய்வங்கள் என்று) நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை அழையுங்கள்! அவர்கள் வானங்களிலும் பூமியிலும் அணு அளவுக்கும் உரிமை பெறமாட்டார்கள். இன்னும், அவ்விரண்டிலும் அவர்களுக்கு எவ்வித பங்கும் இல்லை. அவர்களில் எவரும் அவனுக்கு உதவியாளராக இல்லை.