>

உமர் ஷரீஃப் — 425

33:51 (நபியே!) அவர்களில் (-உமது மனைவிகளில்) நீர் நாடுபவரை தள்ளிவைப்பீராக! இன்னும், நீர் நாடுபவரை உம் பக்கம் சேர்த்துக்கொள்வீராக! நீர் நீக்கிவிட்டவர்களில் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ அது உம்மீது குற்றம் இல்லை. இது அவர்களின் கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும் நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு அவர்கள் எல்லோரும் திருப்தி அடைவதற்கும் நெருக்கமான(து இன்னும் சுலபமான)து ஆகும். அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிவான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா சகிப்பாளனாக இருக்கிறான்.

33:52 (இந்த அத்தியாயத்தின் ஐம்பதாவது வசனத்தில் கூறப்பட்ட பெண்களுக்கு) பின்னர் (வேறு) பெண்கள் உமக்கு ஆகுமாக மாட்டார்கள். இன்னும், இவர்களுக்கு பதிலாக (வேறு) பெண்களை நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல, அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. உமது வலக்கரம் சொந்தமாக்கிய பெண்களைத் தவிர. (அந்த அடிமைப் பெண்கள் உமக்கு ஆகுமானவர்களே.) அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

33:53 நம்பிக்கையாளர்களே! ஓர் உணவின் பக்கம் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் தவிர நபியின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள். (அப்படி அழைக்கப்பட்டாலும் முன் கூட்டியே அங்கு சென்று) அது தயாராவதை எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். என்றாலும், நீங்கள் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால் (வீட்டினுள்) நுழையுங்கள். நீங்கள் சாப்பிட்டுவிட்டால் (வீட்டிலிருந்து) பிரிந்து (சென்று) விடுங்கள். (உணவு உண்ட பின்னர்) பேச்சை புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும். நிச்சயமாக இது நபிக்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கும். அவர் உங்களிடம் (அதைக் கூற) வெட்கப்படுவார். அல்லாஹ் சத்தியத்திற்கு வெட்கப்படமாட்டான். நீங்கள் அவர்களிடம் (-நபியின் மனைவிகளிடம் ஏதேனும்) ஒரு பொருளைக் கேட்டால் திரைக்குப் பின்னால் இருந்து அவர்களிடம் கேளுங்கள். அதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் மிகத் தூய்மையானதாகும். அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் தொந்தரவு தருவதும் அவருக்குப் பின்னர் அவருடைய மனைவிகளை நீங்கள் மணமுடிப்பதும் உங்களுக்கு எப்போதும் ஆகுமானதல்ல. நிச்சயமாக இவை அல்லாஹ்விடம் பெரிய பாவமாக இருக்கிறது.

33:54 நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினால்; அல்லது, அதை மறைத்தால் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.