உமர் ஷரீஃப் — 424
33:44 அவர்கள் அவனை சந்திக்கிற நாளில் அவர்களது முகமன் ஸலாம் ஆகும். இன்னும், அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.
33:45 நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்.
33:46 இன்னும், அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்.)
33:47 (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிகப் பெரிய அருள் இருக்கிறது.”
33:48 (நபியே!) நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்! அவர்களின் தொந்தரவை (கண்டு கொள்ளாமல்) விட்டுவிடுவீராக! இன்னும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
33:49 நம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொண்ட பெண்களை நீங்கள் திருமணம் முடித்தால், பிறகு அவர்களுடன் நீங்கள் உறவு வைப்பதற்கு முன்னர் அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் நீங்கள் கணக்கிட வேண்டிய இத்தா – தவணைக் காலம் ஏதும் உங்களுக்கு அவர்கள் மீது (கடமை) இல்லை. ஆக, (நீங்கள் விவாகரத்து செய்யும்போது) அவர்களுக்கு (உங்கள் வசதிக்கு ஏற்ப) செல்வத்தைக் கொடுங்கள்! இன்னும், அழகிய முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
33:50 நபியே! நீர் அவர்களுக்கு (மஹ்ர் என்ற) திருமணக் கொடைகளை கொடுத்(து மணமுடித்)த உமது மனைவிகளையும் அல்லாஹ் உமக்கு போரில் கொடுத்த அடிமைப் பெண்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கியவர்களையும் (-உமக்கு என்று வைத்துக்கொண்ட பெண்களையும்) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்த உமது தந்தையின் உடன் பிறந்தவர்களின் மகள்களையும் உமது மாமியின் மகள்களையும் உமது தாய் மாமாவின் மகள்களையும் உமது தாயின் உடன்பிறந்த சகோதரிகளின் மகள்களையும் நிச்சயமாக நாம் உமக்கு (நீர் அவர்களை மணமுடிப்பதற்கு) ஆகுமாக்கினோம். இன்னும், ஒரு முஃமினான பெண், தன்னை நபிக்கு அன்பளிப்பு செய்தால், நபியும் அவளை மணமுடிக்க நாடினால் அந்த பெண்ணையும் உமக்கு ஆகுமாக்கினோம். இது (-மஹ்ர் இன்றி மணமுடிப்பது எல்லா) முஃமின்களுக்கும் அன்றி உமக்கு மட்டும் பிரத்தியோகமான சலுகையாகும். அவர்கள் மீது (-நம்பிக்கையாளர்கள் மீது) அவர்களின் மனைவிமார்கள் இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் (-அடிமைப் பெண்கள்) விஷயத்தில் நாம் கடமையாக்கியதை திட்டமாக நாம் அறிவோம். (நபியே!) உமக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக (நாம் மேற்கூறப்பட்ட பெண்களை மணமுடிப்பதையும் தன்னை அன்பளிப்புச் செய்யும் பெண்ணை மஹ்ரின்றி மணமுடிப்பதையும் உமக்கு ஆகுமாக்கினோம்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.