>

உமர் ஷரீஃப் — 417

32:21 அவர்கள் (நேர்வழியின் பக்கம்) திரும்புவதற்காக மிகப் பெரிய தண்டனைக்கு முன்னர் சிறிய தண்டனையை நிச்சயமாக நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்போம்.

32:22 தனது இறைவனின் வசனங்களினால் அறிவுரைக் கூறப்பட்டு, பிறகு அவற்றை புறக்கணித்த ஒருவனை விட பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளிடம் பழிவாங்குவோம்.

32:23 திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தைத் கொடுத்தோம். ஆகவே, அவரை (விண்ணுலகப் பயணத்தில்) சந்திப்பதில் நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம். அ(ந்த வேதத்)தை இஸ்ரவேலர்களுக்கு நேர்வழியாக நாம் ஆக்கினோம்.

32:24 அவர்கள் (நமது மார்க்கத்தில்) பொறுமையாக (உறுதியாக) இருந்தபோது நமது கட்டளையின்படி நேர்வழி காட்டுகிற தலைவர்களை அவர்களில் நாம் உருவாக்கினோம். அ(ந்தத் தலை)வர்கள் நமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தனர்.

32:25 நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்.

32:26 இ(ந்த மக்காவில் வசிப்ப)வர்களுக்கு முன்னர் தங்கள் வசிப்பிடங்களில் சுற்றித் திரிந்த எத்தனையோ பல தலைமுறையினர்களை நாம் அழித்தது (பாவிகளின் விஷயத்தில் நாம் நடந்துகொள்ளும் விதத்தை) அவர்களுக்கு தெளிவுபடுத்தவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?

32:27 நிச்சயமாக நாம் காய்ந்த பூமிக்கு மழை நீரை ஓட்டிவருகிறோம்; அதன் மூலம் அவர்களின் கால்நடைகளும் அவர்களும் சாப்பிடுகிற விளைச்சலை உற்பத்தி செய்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (இதை) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?

32:28 இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “(முஹம்மதின் தோழர்களே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (எங்களுக்கு தண்டனை உண்டு என்ற) இந்த தீர்ப்பு எப்போது (நிகழும்)?”

32:29 (நபியே!) கூறுவீராக! “தீர்ப்பு (வருகின்ற) நாளில் நிராகரிப்பவர்களுக்கு அவர்களது ஈமான் (-நம்பிக்கை) பலனளிக்காது. இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.”

32:30 ஆக! (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! (அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக (நீர் அவர்களுக்கு எச்சரித்ததை) அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.