உமர் ஷரீஃப் — 406
30:16 ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ, நமது வசனங்களையும் மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அவர்கள் (நரக) தண்டனைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.
30:17 ஆகவே, நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும் (-சூரியன் மறைந்த பின்னரும்) காலைப் பொழுதை அடையும்போதும் (சூரியன் உதிக்கும் முன்னரும் - மஃரிபு மற்றும் ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றி) அல்லாஹ்வைத் துதியுங்கள்.
30:18 இன்னும், வானங்களிலும் பூமியிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. இன்னும், மாலையிலும் நீங்கள் மதியப் பொழுதில் இருக்கும்போதும் (அல்லாஹ்வை தொழுது துதியுங்கள்).
30:19 அவன், இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளியாக்குகிறான்; இன்னும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளியாக்குகிறான்: இன்னும், பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் பூமியிலிருந்து மீண்டும் உயிருடன்) வெளியேற்றப்படுவீர்கள்.
30:20 இன்னும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான், அவன் உங்களை (-உங்கள் மூலப் பிதாவை) மண்ணிலிருந்து படைத்தான். பிறகு, (அவரின் சந்ததிகளாகிய) நீங்களோ மனிதர்களாக (பூமியில் உணவைத்தேடி பல இடங்களுக்கு) பிரிந்து செல்கிறீர்கள்.
30:21 இன்னும், அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை - அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக - படைத்ததும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும், உங்க(ள் இரு குடும்பங்க)ளுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
30:22 இன்னும், வானங்களும் பூமியும் படைக்கப்பட்டிருப்பதும் உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் வேறுபட்டு இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். கல்வியாளர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
30:23 இன்னும், நீங்கள் இரவிலும் பகலிலும் தூங்குவதும்; அவனுடைய அருளிலிருந்து நீங்கள் (பொருள் சம்பாதிக்க) தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். (உபதேசங்களை) செவியேற்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
30:24 இன்னும், அவன் உங்களுக்கு மின்னலை பயமாகவும் ஆசையாகவும் காட்டுவதும்; இன்னும், வானத்திலிருந்து மழையை அவன் இறக்குவதும்; அதன் மூலம் பூமியை - அது மரணித்த பின்னர் - உயிர்ப்பிப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். சிந்தித்து புரிகிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.