>

உமர் ஷரீஃப் — 382

27:56 ஆக, அவருடைய மக்களின் பதிலோ, “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நிச்சயமாக அவர்கள் சுத்தமாக இருக்கின்ற மனிதர்கள்” என்பதாகவே தவிர இல்லை.

27:57 ஆக, அவருடைய மனைவியைத் தவிர நாம் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தோம். (ஊரில்) மிஞ்சி இருப்பவர்களில் அவளை (இருக்க வைத்து நமது தண்டனை இறங்கும்போது அவள் அழிக்கப்படவேண்டும் என்று) முடிவு செய்தோம்.

27:58 இன்னும், அவர்கள் மீது (தண்டனையின்) மழையை பொழிவித்தோம். ஆக, எச்சரிக்கப்பட்டவர்களின் அந்த மழை (தண்டனைக்காக இறக்கப்பட்ட மழைகளிலே) மிகக் கெட்டதாகும்.

27:59 (நபியே!) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்(களாகிய உம்மீதும் உமது தோழர்)கள் மீதும் ஸலாம் - ஈடேற்றம்- உண்டாகுக! அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்கள் இணைவைப்பவை (சிறந்தவை)யா? (அல்லாஹ்வை வணங்குவது சிறந்ததா? அல்லது, அவனல்லாத படைப்புகளை வணங்குவது சிறந்ததா?)”

27:60 வானங்களையும் பூமியையும் படைத்தவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது எதையும் படைக்க ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா?). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. (இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்கள் (அல்லாஹ்வுடன் படைப்புகளை) இணைவைக்கின்ற மக்கள் ஆவார்கள்.

27:61 அல்லது, எவன் பூமியை நிலையானதாக ஆக்கி, அதற்கிடையில் ஆறுகளை ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் இருப்பதற்காக) பெரும் மலைகளைப் படைத்து, இரு கடல்களுக்கு இடையில் தடுப்பை அமைத்தானோ அவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவர்கள் வணங்குவதற்கு சிறந்தவர்களா?) (இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கண்ணியத்தையும் தாங்கள் வணங்கும் பொய்யான தெய்வங்களின் பலவீனத்தையும்) அறியமாட்டார்கள்.

27:62 அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு - அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு) - பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குவானோ, இன்னும், உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குவானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

27:63 அல்லது, தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு எவன் வழிகாட்டுகிறானோ, இன்னும் தனது அருளுக்கு முன்னர் காற்றுகளை சுபச்செய்தியாக எவன் அனுப்புகிறானோ அவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாத சிலைகள் சிறந்தவையா? இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.