உமர் ஷரீஃப் — 380
27:36 ஆக, (அவளின் தூதர்) சுலைமானிடம் வந்தபோது, (சுலைமான்) கூறினார்: “செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்ததாகும். மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்பினால் பெருமிதம் அடைவீர்கள். (நான் அதை ஏற்க மாட்டேன்.)”
27:37 “நீ அவர்களிடம் திரும்பிப் போ! ஆக, நாம் அவர்களிடம் (பல) இராணுவங்களைக் கொண்டு வருவோம். அவர்களை எதிர்ப்பதற்கு அவ(ளின் வீரர்க)ளுக்கு அறவே வலிமை இருக்காது. இன்னும், நிச்சயமாக அவர்களை அ(வர்களின் நகரத்)திலிருந்து இழிவானவர்களாக நாம் வெளியேற்றுவோம். இன்னும், அவர்கள் சிறுமைப்படுவார்கள்.”
27:38 அவர் (தன் அவையோரிடம்) கூறினார்: “முக்கிய பிரமுகர்களே! உங்களில் யார் அவளுடைய அரச கட்டிலை - அவர்கள் என்னிடம் பணிந்தவர்களாக வருவதற்கு முன்னர் - கொண்டு வருவார்.”
27:39 ஜின்களில் (கடும் தந்திரமும் வலிமையும் வீரமும் முரட்டுக் குணமும் உடைய) பராக்கிரமசாலி கூறியது: நீர் உமது (இந்த) இடத்திலிருந்து எழுவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன். நிச்சயமாக நான் அதற்கு ஆற்றல் உள்ளவன், (அதில் உள்ள பொருள்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கு நான்) நம்பிக்கைக்குரியவன் ஆவேன்.
27:40 தன்னிடம் வேதத்தின் ஞானம் இருந்த (மனிதர்) ஒருவர் கூறினார்: “(நீர் தூரமாக ஒன்றை பார்த்த பின்னர்,) உமது பார்வை உன் பக்கம் திரும்புவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன்.” ஆக, (அவ்வாறே கொண்டு வரப்பட்ட) அதை (-அந்த அரசகட்டிலை) தன்னிடம் (-தனக்கு முன்னால்) முழுமையாக வந்து சேர்ந்து விட்டதை சுலைமான் பார்த்தபோது, (எனது இந்த ஆட்சி, அதிகாரம், படைபலம், அறிவு ஆகிய) இவை என் இறைவனின் அருளினால் கிடைத்ததாகும். நான் நன்றி செலுத்துகிறேனா, அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறேனா என்று அவன் என்னை சோதிப்பதற்காக (இவற்றை எனக்கு தந்துள்ளான்). யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்குத்தான் நன்மையாகும். யார் நிராகரிப்பாரோ (-நன்றி கெடுவாரோ அவரால் அல்லாஹ்விற்கு எவ்வித குறையும் இல்லை.) ஏனெனில், என் இறைவன் முற்றிலும் தேவை அற்றவன் (-தன்னில் நிறைவானவன், எல்லோருக்கும் கணக்கின்றி கொடுக்கும்) பெரும் தயாளன் ஆவான்.
27:41 அவர் கூறினார்: “நீங்கள் அவளுக்கு அவளுடைய அரச கட்டிலை மாற்றி விடுங்கள். நாம் பார்ப்போம், அவள் (தனது பொருளை) அறிந்து கொள்கிறாளா? அல்லது அவள் (தமது பொருளை) அறியாதவர்களில் ஆகிவிடுகிறாளா?”
27:42 ஆக, அவள் வந்தபோது, “இது உனது அரச கட்டில் போன்றா இருக்கிறது?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான் இருக்கிறது.” (பின்னர் சுலைமான் கூறினார்:) இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டு இருக்கிறோம். இன்னும், நாம் முஸ்லிம்களாக (அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தவர்களாக) இருக்கிறோம்.
27:43 அவள் அல்லாஹ்வை அன்றி (சூரியனை) வணங்கிக்கொண்டு இருந்தது (அல்லாஹ்வை அவள் வணங்குவதை விட்டும்) அவளைத் தடுத்து விட்டது. நிச்சயமாக, அவள் நிராகரிக்கின்ற மக்களில் இருந்தாள்.
27:44 “நீ மாளிகையில் நுழை!” என்று அவளுக்கு கூறப்பட்டது. அவள் அதைப் பார்த்தபோது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது சுலைமான்) கூறினார்: “நிச்சயமாக இது (-இந்த மாளிகையின் தரை) கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட (மொழுவப்பட்ட, உருவாக்கப்பட்ட) மாளிகை(யின் தரை)யாகும்.” அவள், கூறினாள்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு சுலைமானுடன் சேர்ந்து நானும் (பணிந்து) முஸ்லிமாகி விட்டேன்.”