>

உமர் ஷரீஃப் — 38

2:234 இன்னும், உங்களில் எவர்கள் இறப்பார்களோ; இன்னும், மனைவிகளை விட்டுச் செல்வார்களோ அந்த மனைவிமார்கள் நான்கு மாதங்கள், பத்து நாட்கள் தங்களுக்கு (இத்தா முடிவதை) எதிர்பார்(த்து இரு)ப்பார்கள். அவர்கள் தங்கள் (இத்தாவின் இறுதி) தவணையை அடைந்து விட்டால் நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.

2:235 இன்னும், அப்பெண்களை திருமணம் பேசுவதற்காக நீங்கள் சூசகமாக எடுத்துக் கூறியதில் அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்(து வைத்)ததில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை (மணமுடிக்க) நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். நல்ல கூற்றைக் கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில்) அவர்களுக்கு ரகசியமாக (திருமண) வாக்குறுதி அளிக்காதீர்கள். விதிக்கப்பட்ட சட்டம் (இத்தா) அதன் தவணையை அடையும் வரை (அப்பெண்களுடன்) திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறியுங்கள். ஆகவே, அவனைப் பயந்து (அவனுக்கு மாறுசெய்வதைவிட்டு) எச்சரிக்கையாக இருங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் என்பதையும் அறியுங்கள்.

2:236 பெண்களை - அவர்களை நீங்கள் தொடாமல் (-உடலுறவு வைக்காமல்) இருக்கும்போது; அல்லது, அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - நீங்கள் விவாகரத்து செய்தால் (அது) உங்கள் மீது அறவே குற்றமில்லை. அவர்களுக்கு (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு) நல்ல முறையில் பொருள் கொடுங்கள். (தலாக் செய்த) செல்வந்தர் மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் செய்த) ஏழை மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு பொருளை அன்பளிப்பு செய்வது) கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும்.

2:237 இன்னும், அவர்களுக்கு ஒரு மஹ்ரை நீங்கள் நிர்ணயித்து விட்டிருக்க, அவர்களைத் தொடுவதற்கு (-உடலுறவுக்கு) முன்னதாகவே அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் பாதி (அப்பெண்களுக்கு) கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் (-மனைவிகள்) மன்னித்தால் அல்லது எவனுடைய கையில் திருமண ஒப்பந்தம் இருக்கிறதோ அவன் (-கணவன்) மன்னித்தால் தவிர. (மனைவி பாதி மஹ்ரையும் வாங்காமல் விடலாம். அல்லது, கணவன் முழு மஹ்ரையும் கொடுக்கலாம்.) ஆயினும், (ஆண்களாகிய) நீங்கள் மன்னி(த்து முழு மஹ்ரையும் கொடு)ப்பது இறை அச்சத்திற்கு மிக நெருக்கமா(ன செயலா)கும். உங்களுக்கு மத்தியில் (ஒருவர் மற்றவருக்கு) உதவுவதை மறக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.