உமர் ஷரீஃப் — 370
26:61 ஆக, இரண்டு படைகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபோது மூஸாவின் தோழர்கள், “நிச்சயமாக நாங்கள் பிடிக்கப்பட்டோம்” என்று கூறினார்கள்.
26:62 (மூஸா) கூறினார்: அவ்வாறல்ல. நிச்சயமாக என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு (விரைவில்) வழிகாட்டுவான்.
26:63 ஆக, “உமது தடியினால் கடலை அடிப்பீராக!” என்று மூஸாவிற்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆக, அது பிளந்தது. ஆக, ஒவ்வொரு பிளவும் பெரிய மலைப் போன்று இருந்தது.
26:64 இன்னும், அங்கு மற்றவர்களை (-ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்.
26:65 இன்னும், மூஸாவையும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.
26:66 பிறகு, மற்றவர்களை மூழ்கடித்தோம்.
26:67 நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
26:68 இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
26:69 அவர்களுக்கு இப்ராஹீமுடைய செய்தியை ஓதி காட்டுவீராக!
26:70 அவர் தனது தந்தை இன்னும் தனது மக்களை நோக்கி, நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்? என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!)
26:71 அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வழிபட்டவர்களாகவே நாங்கள் தொடர்ந்து இருப்போம்.”
26:72 அவர் கூறினார்: “நீங்கள் (அவற்றை) அழைக்கும்போது, அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?”
26:73 “அல்லது, (நீங்கள் அவற்றை வணங்கினால் உங்களுக்கு) அவை நன்மை தருமா? அல்லது (நீங்கள் அவற்றை வணங்கவில்லை என்றால் உங்களுக்கு) அவை தீங்கு விளைவிக்குமா?”
26:74 அவர்கள் கூறினார்கள்: “அவ்வாறல்ல! எங்கள் மூதாதைகளை அவ்வாறு செய்பவர்களாக கண்டோம். (ஆகவே, நாங்களும் அவற்றை வணங்குகிறோம்.)”
26:75 அவர் கூறினார்: “நீங்கள் வணங்கிக் கொண்டு இருக்கின்ற சிலைகள் பற்றி (எனக்கு) சொல்லுங்கள்.”
26:76 “நீங்களும் உங்கள் முந்திய மூதாதைகளும் (வணங்குகின்ற சிலைகள் பற்றி சொல்லுங்கள்.)”
26:77 “ஏனெனில், நிச்சயமாக அவை எனக்கு எதிரிகள் ஆவார்கள். ஆனால், அகிலங்களின் இறைவனைத் தவிர. (அவன்தான் எனது நேசன், நான் வணங்கும் கடவுள்)”
26:78 “அவன்தான் என்னைப் படைத்தான். ஆகவே, அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
26:79 “இன்னும், அவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும், எனக்கு நீர் புகட்டுகிறான்.”
26:80 “இன்னும், நான் நோயுற்றால் அவன்தான் எனக்கு சுகமளிக்கிறான்.”
26:81 “இன்னும், அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான். பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்.”
26:82 “இன்னும், விசாரணை நாளில் என் பாவங்களை எனக்கு அவன் மன்னிக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன்.”
26:83 “என் இறைவா! எனக்கு தூதுத்துவ ஞானத்தை வழங்குவாயாக! இன்னும், என்னை நல்லவர்களுடன் சேர்ப்பாயாக!”