உமர் ஷரீஃப் — 35
2:220 (நீங்கள்) இம்மை, மறுமையி(ன் காரியத்தி)ல் (சிந்திப்பதற்காக அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்). இன்னும், அனாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவர்களைச் சரியான முறையில் பராமரிப்பது மிக நன்மையாகும்! இன்னும், நீங்கள் (உங்களுடன்) அவர்களைச் சேர்த்துக் கொண்டால் (அது தவறில்லை. காரணம், அவர்கள்) உங்கள் சகோதரர்களே! சரியான முறையில் பராமரிப்பவரிலிருந்து கெடுதி செய்பவர்களை அல்லாஹ் அறிவான். இன்னும், அல்லாஹ் நாடினால் உங்களைச் சிரமப்படுத்தி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.”
2:221 இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப்பெண் இணைவைப்பவளைவிடச் சிறந்தவள், (இணைவைக்கும்) அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. (இணைவைக்கும்) அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ்வோ, தன் கட்டளையினால் சொர்க்கம் இன்னும் மன்னிப்பிற்கு (உங்களை) அழைக்கிறான். இன்னும், மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான்.
2:222 இன்னும், மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “அது ஓர் இடையூறாகும். எனவே, மாதவிடாயில் பெண்களிடமிருந்து (-அவர்களுடன் உடலுறவு வைப்பதிலிருந்து) விலகிவிடுங்கள். அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களுடன் உடலுறவு வைக்காதீர்கள். அவர்கள் (மாதவிடாய் நின்று, குளித்து) முழுமையாக சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் வாருங்கள்.’’ நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம் மீளுபவர்கள் மீது அன்பு வைக்கிறான். இன்னும், பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
2:223 உங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்கள் ஆவார்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் நாடியவாறு வாருங்கள். இன்னும், உங்களுக்காக (நன்மைகளை) முற்படுத்துங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதை அறியுங்கள். இன்னும், (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
2:224 “நீங்கள் நன்மை செய்ய மாட்டீர்கள்; இன்னும், அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள்; இன்னும் மக்களுக்கு மத்தியில் இணக்கம் ஏற்படுத்த மாட்டீர்கள்” என்று நீங்கள் செய்கின்ற சத்தியங்களுக்கு வலுவாக (-ஆதாரமாக) அல்லாஹ்வை ஆக்காதீர்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.