உமர் ஷரீஃப் — 346
23:60 இன்னும், எவர்கள் தாங்கள் கொடுக்கும் தர்மத்தை கொடுப்பார்களோ, அவர்களுடைய உள்ளங்களோ நிச்சயம் அவர்கள் தங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் என்று பயந்தவையாக இருக்கும் நிலையில்,
23:61 அவர்கள்தான் நன்மைகளில் விரைந்து செல்கிறார்கள். இன்னும், அவர்கள் அவற்றை முந்தி செய்பவர்கள் ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்காக இறைவனிடம் நற்பாக்கியம் முந்திவிட்டது.)
23:62 எந்த ஓர் ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் தருவதில்லை. நம்மிடம் (படைப்புகளுடைய செயல்கள் எழுதப்பட்ட,) சத்தியத்தை பேசுகிற ஒரு புத்தகம் இருக்கிறது. (கூடுதல் குறைவின்றி அடியார்களின் செயலை அது அறிவிக்கும்.) இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
23:63 மாறாக, அவர்களது உள்ளங்கள் இ(ந்த வேதத்)தை அறியாமல் இருப்பதில் இருக்கின்றன. இன்னும், அவர்களுக்கு அவை அல்லாத (இறை நம்பிக்கையாளர்கள் செய்கின்ற நல்லறங்கள் அல்லாமல்) வேறு (பாவ) செயல்கள் (மட்டுமே) உள்ளன. அவர்கள் அவற்றைத்தான் செய்கிறார்கள். (அவர்கள் நல்லோர் செய்கின்ற நல்லறங்களை செய்ய மாட்டார்கள்.)
23:64 இறுதியாக, அவர்களில் (பெரும் பாவிகளாக) இருந்த சுகவாசிகளை (-செல்வமும் பதவியும் உடைய நிராகரிப்பாளர்களை) தண்டனையைக் கொண்டு நாம் பிடித்தால் அப்போது அவர்கள் (உதவி கேட்டு) கதறுகிறார்கள்.
23:65 இன்றைய தினம் கதறாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டீர்கள்.
23:66 திட்டமாக எனது வசனங்கள் உங்களுக்கு ஓதி காண்பிக்கப்பட்டு வந்தன. ஆக, நீங்கள் உங்கள் குதிங்கால்கள் மீது பின்னோக்கி செல்பவர்களாக இருந்தீர்கள்.
23:67 (அவர்கள் செய்கின்ற) அ(ந்)த (தீய, பாவ செயல்களி)னால் பெருமை அடித்தவர்களாக (உம்மை விட்டு திரும்பிச் செல்கிறார்கள்). இரவில் இதைப் (பற்றி கேலியாக) பேசியவர்களாக (குர்ஆன் விஷயத்தில் மக்களிடம்) வீணான (தவறான கருத்)தைக் கூறுகிறார்கள்.
23:68 ஆக, இந்த குர்ஆனை இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? அல்லது, முன்னோர்களான இவர்களது மூதாதைகளுக்கு வராத ஒன்று இவர்களிடம் வந்து விட்டதா? (அதனால் அவர்கள் இதை புறக்கணிக்கிறார்களா?)
23:69 அல்லது, இவர்கள் தங்களது தூதரை (அவர் உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்று) அறியவில்லையா? அதனால், அவர்கள் அவரை மறுக்கிறார்களா?
23:70 அல்லது, “அவருக்கு பைத்தியம் இருக்கிறது (எனவேதான் இப்படி உளருகிறார்)” என்று இவர்கள் கூறுகின்றனரா? மாறாக, இவர் அவர்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளார். இன்னும், அவர்களில் அதிகமானவர்கள், உண்மையை வெறுக்கிறார்கள்.
23:71 உண்மையாளன் (-அல்லாஹ்) அவர்களது விருப்பங்களை பின்பற்றி (காரியங்களை நடத்தி)னால் வானங்களும், பூமியும் இன்னும், அவற்றில் உள்ளவர்களும் நாசமடைந்து இருப்பார்கள். மாறாக, அவர்களுக்கு உரிய விளக்கத்தை நாம் அவர்களுக்கு விவரித்துவிட்டோம். ஆனால், அவர்கள் தங்களுக்கு கூறப்பட்ட விளக்கத்தை புறக்கணிக்கிறார்கள்.
23:72 (இந்த சத்தியத்தை அவர்களுக்கு நீர் போதித்ததற்காக) அவர்களிடம் நீர் கூலி கேட்கிறீரா? (அதனால் அவர்கள் இந்த சத்தியத்தை விட்டு விலகி செல்கிறார்களா?) ஆக, உமது இறைவனின் கூலிதான் மிகச் சிறந்தது. இன்னும், அவன் கொடை வழங்குபவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
23:73 இன்னும், (நபியே!) நிச்சயமாக நீர் அவர்களை நேரான பாதையின் பக்கமே அழைக்கிறீர்.
23:74 இன்னும், நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் (அந்த நேரான) பாதையை விட்டு விலகிவிடக் கூடியவர்கள்தான்.