>

உமர் ஷரீஃப் — 330

21:91 இன்னும், தனது மறைவிடத்தை பாதுகாத்தவளை (-மர்யமை) நினைவு கூர்வீராக! (நாம் படைத்த) நமது உயிர்களிலிருந்து ஓர் உயிரை அவளில் (-அவளுடைய மேலாடையின் முன்பக்க வழியில்) நாம் ஊதினோம். இன்னும், அவளையும் அவளுடைய மகனையும் அகிலத்தார்களுக்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம்.

21:92 நிச்சயமாக இதுதான் (நீங்கள் பின்பற்ற வேண்டிய) உங்கள் ஒரே மார்க்கமாகும். நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, என்னை (மட்டும் கலப்பற்ற முறையில்) வணங்குங்கள்.

21:93 இன்னும், அவர்கள் தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் (பல பிரிவுகளாக) பிரிந்து விட்டனர். (அவர்கள்) எல்லோரும் நம்மிடமே திரும்புவார்கள்.

21:94 ஆக, யார் - அவரோ நம்பிக்கையாளராக இருந்து, - நற்காரியங்களை செய்வாரோ அவருடைய (நல்ல) முயற்சிக்கு மறுப்பு இல்லை. (அவருக்கு கண்டிப்பாக நற்கூலி உண்டு.) இன்னும், நிச்சயமாக நாம் அதை பதிவு செய்(து பாதுகாத்து வரு)கிறோம்.

21:95 நாம் அழித்த (அந்த) ஊர் (மக்கள்) மீது உறுதியாகி விட்டது, “நிச்சயமாக அவர்கள் (நேர்வழியின் பக்கம்) திரும்ப மாட்டார்கள்.” (ஆகவேதான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.)

21:96 இறுதியாக, யஃஜூஜ் இன்னும் மஃஜூஜ் (உடைய அடைப்பு) திறக்கப்பட்டால், (மறுமை சம்பவித்து விடும்.) அவர்கள் உயரமான எல்லா இடத்திலிருந்தும் விரைந்து வருவார்கள்.

21:97 இன்னும், (மறுமை நிகழும் என) உண்மையான வாக்கு சமீபமாகிவிடும். அப்போது, நிராகரித்தவர்களின் பார்வைகள் கூர்மையாக (உற்று நோக்கிய வண்ணமாக) இருக்கும். “எங்கள் நாசமே! திட்டமாக நாங்கள் இதை (புறக்கணித்து) விட்டு அலட்சியத்தில் இருந்தோம். அது மட்டுமல்ல, நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” (என்று அந்த நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்).

21:98 நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவையும் நரகத்தில் வீசி எறியப்படும் பொருளாவீர்கள். (இறைவனுக்கு மாறுசெய்த) நீங்கள் (எல்லோரும்) அதில் நுழைவீர்கள்.

21:99 (நாங்கள் வணங்கிய) இவை கடவுள்களாக இருந்திருந்தால் இ(ந்த நரகத்)தில் நுழைந்திருக்க மாட்டார்கள். “(அல்லாஹ்விற்கு இணை கற்பித்த நீங்கள்) எல்லோரும் அதில் நிரந்தரமாக தங்கி விடுவீர்கள்” (என்று அவர்களை நோக்கி கூறப்படும்).

21:100 அவர்களுக்கு அதில் கடுமையாக மூச்சு இறைத்தல் உண்டு. இன்னும், அவர்கள் அதில் (பிறரின் சத்தத்தை) செவியுற மாட்டார்கள்.

21:101 நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடமிருந்து மிக அழகிய வாக்கு முந்திவிட்டதோ அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து தூரமாக்கப்பட்டு இருப்பார்கள்.