>

உமர் ஷரீஃப் — 312

19:96 நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு ரஹ்மான் (மக்களின் உள்ளங்களில்) அன்பை ஏற்படுத்துவான்.

19:97 ஆக, இ(ந்த வேதத்)தை உமது நாவில் நாம் இலகுவாக்கியதெல்லாம் இறையச்சமுள்ளவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும்; விதண்டாவாதம் செய்கின்ற மக்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பதற்காகவும்தான்.

19:98 இன்னும், இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்களில் யாரையும் நீர் (இப்போது) பார்க்கிறீரா? அல்லது, அவர்களுடைய சிறிய சப்தத்தை நீர் கேட்கிறீரா?

20:1 தா ஹா.

20:2 (நபியே!) நாம் இந்த குர்ஆனை நீர் சிரமப்படுவதற்காக உம்மீது இறக்கவில்லை,

20:3 எனினும், (அல்லாஹ்வை) அஞ்சுகிறவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக (இதை நாம் இறக்கினோம்).

20:4 இது பூமியையும் உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.

20:5 ரஹ்மான், அர்ஷுக்கு மேல் உயர்ந்து விட்டான்.

20:6 வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவையும் ஈரமான மண்ணுக்குக் கீழ் உள்ளவையும் அவனுக்கே உரியன.

20:7 நீர் பேச்சை பகிரங்கப்படுத்தினாலும் (அல்லது மறைத்தாலும்) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதைவிட) மிக மறைந்ததையும் நன்கறிவான்.

20:8 அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவனுக்கு மிக அழகிய பெயர்கள் உள்ளன.

20:9 (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?

20:10 அவர் ஒரு நெருப்பைப் பார்த்தபோது (நிகழ்ந்த சம்பவத்தின் செய்தி உமக்கு வந்ததா?). ஆக, அவர் தனது குடும்பத்தினருக்குக் கூறினார்: “(இங்கே) தங்கி இருங்கள்! நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் கண்டேன். (நான் அங்கு சென்று) அதிலிருந்து ஒரு சிறிய நெருப்பு கொள்ளியை உங்களிடம் நான் கொண்டு வரலாம். அல்லது, நெருப்பின் அருகில் ஒரு வழிகாட்டியை நான் பெறலாம்.

20:11 ஆக, அவர் அதனிடம் வந்தபோது (இறைவனின் புறத்திலிருந்து) அழைக்கப்பட்டார், மூஸாவே!

20:12 நிச்சயமாக நான்தான் உமது இறைவன். ஆக, உமது செருப்புகளை கழட்டுவீராக! நிச்சயமாக நீர் துவா என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.