>

உமர் ஷரீஃப் — 309

19:52 இன்னும், மலையில் (மூஸாவுடைய) வலது பக்கத்திலிருந்து நாம் அவரை அழைத்தோம். நாம் அவரை (நம்முடன்) பேசுகிறவராக நெருக்கமாக்கினோம்.

19:53 இன்னும், நமது அருளால் அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு நபியாக வழங்கினோம்.

19:54 இன்னும், இவ்வேதத்தில் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர், வாக்கில் உண்மையாளராக இருந்தார். இன்னும் தூதராக நபியாக இருந்தார்.

19:55 இன்னும், அவர் தனது குடும்பத்தினருக்கு தொழுகையையும் ஸகாத்தையும் ஏவுகின்றவராக இருந்தார். மேலும், அவர் தன் இறைவனிடம் திருப்திக்குரியவராக இருந்தார்.

19:56 இன்னும், இவ்வேதத்தில் இத்ரீஸை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருந்தார்.

19:57 இன்னும், அவரை உயர்வான இடத்திற்கு மேலே உயர்த்தினோம்.

19:58 அல்லாஹ் அருள் புரிந்த இந்த நபிமார்கள் ஆதமுடைய சந்ததியிலிருந்தும்; நூஹுடன் நாம் (கப்பலில்) ஏற்றியவர்களிலிருந்தும்; இப்ராஹீமுடைய சந்ததியிலிருந்தும், இஸ்ராயீலுடைய சந்ததியிலிருந்தும்; இன்னும், நாம் எவர்களை நேர்வழியில் செலுத்தினோமோ, தேர்ந்தெடுத்தோமோ அவர்களிலிருந்தும் உள்ளவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு முன் ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் சிரம்பணிந்தவர்களாக அழுதவர்களாக (ஸுஜூதில்) விழுந்து விடுவார்கள்.

19:59 ஆக, அவர்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை பாழாக்கினர். இன்னும், காம இச்சைகளுக்கு பின்னால் சென்றனர். ஆகவே, அவர்கள் (நரக நெருப்பில் மிகப் பெரிய) தீமையை சந்திப்பார்கள். (இந்த தீமை என்பது நரகத்தில் மிக மோசமான தண்டனைகள் நிறைந்த ஒரு கிணற்றையோ அல்லது ஒரு பள்ளத்தாக்கையோ குறிக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.)

19:60 (எனினும்,) எவர்கள் (தொழுகையை விடுகின்ற குற்றத்திலிருந்து) திருந்தினார்களோ; இன்னும், நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், நன்மையை செய்தார்களோ அவர்களைத் தவிர. அ(த்தகைய)வர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், அவர்கள் அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்.

19:61 (அவர்கள்) ‘அத்ன்’ சொர்க்கங்களில் (நுழைவார்கள்). ரஹ்மான் தன் அடியார்களுக்கு மறைவில் (அவற்றை) வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவனுடைய வாக்கு நிறைவேறக்கூடியதாக இருக்கிறது.

19:62 அவற்றில் (அழகிய முகமனாகிய) ஸலாமைத் தவிர வீணான பேச்சுகளை செவியுற மாட்டார்கள். இன்னும், அவர்களுக்கு அவற்றில் அவர்களுடைய (விருப்ப) உணவு காலையிலும் மாலையிலும் கிடைக்கும்.

19:63 இந்த சொர்க்கத்தை நம் அடியார்களில் யார் இறையச்சமுள்ளவராக இருக்கிறாரோ அவருக்கு சொந்தமாக்கி வைப்போம்.

19:64 இன்னும், (ஜிப்ரீலே! நபி முஹம்மதுக்கு கூறுவீராக!) உமது இறைவனின் உத்தரவின்படியே தவிர நாம் இறங்க மாட்டோம். எங்களுக்கு முன் இருப்பவையும் (-மறுமை காரியங்களும்) எங்களுக்கு பின் இருப்பவையும் (-உலக காரியங்களும்) அவற்றுக்கு மத்தியில் இருக்கின்ற காரியங்களும் அவனுக்கே உரிமையானவை ஆகும். இன்னும், உமது இறைவன் மறதியாளனாக இல்லை.