உமர் ஷரீஃப் — 277
16:88 எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், அல்லாஹ்வுடைய பாதையை விட்டு (பிற மக்களை) தடுத்தார்களோ - அவர்களுக்கு, அவர்கள் விஷமம் செய்து கொண்டிருந்த காரணத்தால் தண்டனைக்கு மேல் தண்டனையை அதிகப்படுத்துவோம்.
16:89 இன்னும், (நபியே!) அந்த நாளை நினைவு கூர்வீராக! அதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாளரை நாம் எழுப்புவோம்; இன்னும், (நிராகரித்த) இவர்களுக்கு எதிராக உம்மை சாட்சியாளராக அழைத்து வருவோம். (நபியே!) எல்லாவற்றையும் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் நேர்வழி காட்டியாகவும் (அதை ஏற்று செயல்படுகின்ற) முஸ்லிம்களுக்கு அருளாகவும் நற்செய்தியாகவும் இவ்வேதத்தை உம்மீது இறக்கினோம்.
16:90 நிச்சயமாக அல்லாஹ், (நீங்கள்) நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் (உங்களை) ஏவுகிறான். மேலும், மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான்.
16:91 இன்னும், நீங்கள் உடன்படிக்கை செய்தால் அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட அந்த) உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். மேலும், சத்தியங்களை - அவற்றை உறுதிபடுத்திய பின்பு - முறிக்காதீர்கள். நீங்களோ அல்லாஹ்வை உங்கள் மீது பொறுப்பாளனாக ஆக்கிவிட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.
16:92 இன்னும், எவள் தான் நெய்த கயிறை (அது நெய்யப்பட்டு) உறுதி பெற்ற பின்பு (பல) உதிரிகளாக பிரித்தாளோ அவளைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒரு சமுதாயத்தை விட (வேறு) ஒரு சமுதாயம் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதற்காக (பலவீனர்களுடன் நீங்கள் செய்த) உங்கள் சத்தியங்களை ஏமாற்றுவதாக, வஞ்சகமாக ஆக்கிவிடுகிறீர்களா?. நிச்சயமாக அல்லாஹ் உங்களை இதன் மூலம் சோதிக்கிறான். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றை மறுமை நாளில் (அவன்) உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்துவான்.
16:93 அல்லாஹ் நாடியிருந்தால் (இஸ்லாமைப் பின்பற்றுகிற) ஒரே ஒரு சமுதாயமாக உங்களை ஆக்கியிருப்பான். எனினும், தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகிறான். மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி நிச்சயமாக (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.