>

உமர் ஷரீஃப் — 266

15:71 லூத் கூறினார்: “(இதோ!) இவர்கள் என் (ஊரில் உள்ள) பெண் பிள்ளைகள் ஆவார்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களை முறைப்படி திருமணம் செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்).”

15:72 (நபியே!) உம் வாழ்க்கையின் மீது சத்தியம்! நிச்சயமாக இவர்கள் (-சிலை வணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகிறார்கள்.

15:73 ஆகவே, (லூத் நபியின் ஊர் மக்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது.

15:74 ஆக, அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அவர்கள் மீது கெட்டியான களிமண்ணினால் ஆன கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்;

15:75 படிப்பினை பெறுகின்ற நுண்ணறிவாளர்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன.

15:76 இன்னும், நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான பார்க்கும்படியான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது.

15:77 நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.

15:78 மேலும், நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) அடர்த்தியான தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள்.

15:79 ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். இன்னும், அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான பாதையில்தான் உள்ளன.

15:80 மேலும், (ஹூத் நபியின் சமுதாயமாகிய) ‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள்.

15:81 இன்னும், அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாக இருந்தனர்.

15:82 மேலும், அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர்.

15:83 ஆக, (அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது.

15:84 ஆக, அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.

15:85 மேலும், வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்காகவே தவிர நாம் படைக்கவில்லை. இன்னும், நிச்சயமாக மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக.

15:86 நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன்.

15:87 இன்னும், (நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்கு நாம் கொடுத்தோம்.

15:88 இவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் கொடுத்த சுகபோகங்கள் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர்! (அவற்றின் மீது ஆசைப்படாதீர்!) இன்னும், அவர்கள் மீது கவலைப்படாதீர். இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் மென்மையாக, பணிவுடன் நடப்பீராக!).

15:89 இன்னும், “நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்” என்று கூறுவீராக.

15:90 (வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (தண்டனையை) இறக்கியது போன்றே (இந்நிராகரிப்பாளர்கள் மீது தண்டனையை இறக்குவோம்).