>

உமர் ஷரீஃப் — 264

15:32 (அல்லாஹ்) கூறினான்: “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீ(யும் சிரம் பணிந்தவனாக) ஆகாமல் இருக்க உனக்கென்ன நேர்ந்தது?”

15:33 (இப்லீஸ்) கூறினான்: “பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து நீ படைத்த ஒரு மனிதனுக்கு (நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவனாகிய) நான் சிரம் பணிவது எனக்கு சரி இல்லை. (அது என்னால் முடியாது!)”

15:34 (அல்லாஹ்) கூறினான்: “ஆக, இதிலிருந்து நீ வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்.”

15:35 “இன்னும், நிச்சயமாக உன் மீது (எனது) சாபம், கூலி (கொடுக்கப்படும்) நாள் வரை உண்டாகட்டும்!”

15:36 (இப்லீஸ்) கூறினான்: “ஆக, என் இறைவா! (இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை எனக்கு நீ அவகாசமளி!”

15:37 (அல்லாஹ்) கூறினான்: “ஆக, நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டாய்,”

15:38 “(தீர்ப்புக்காக) குறிப்பிடப்பட்ட நேரத்தின் (அந்த மறுமை) நாள் (வருகின்ற) வரை.”

15:39 (இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு நிச்சயமாக நான் அலங்கரிப்பேன்; இன்னும், நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நான் வழிகெடு(க்க முயற்சி)ப்பேன்,”

15:40 “அவர்களில் (மனத்தூய்மையுடன் உன்னை மட்டும் வணங்குகின்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர.”

15:41 (அல்லாஹ்) கூறினான்: “இது என் பக்கம் சேர்ப்பிக்கின்ற நேரான வழியாகும்.”

15:42 “நிச்சயமாக என் அடியார்கள் - அவர்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனினும், உன்னைப் பின்பற்றுகின்ற வழிகெட்டவர்களைத் தவிர. (அவர்களைத்தான் நீ வழிகெடுப்பாய்.)”

15:43 “மேலும், நிச்சயமாக நரகம் (வழிகெடுத்தவனாகிய உனக்கும், வழிகெட்டவர்களாகிய) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.”

15:44 அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களில் (தனியாக) பிரி(த்து ஒது)க்கப்பட்ட ஒரு பிரிவினர் உண்டு.

15:45 நிச்சயமாக, அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள்.

15:46 “நீங்கள், ஸலாம் (என்ற முகமன்) உடன் அச்சமற்றவர்களாக அதில் நுழையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்).

15:47 மேலும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து பேசிக்கொண்டு) இருப்பார்கள்.

15:48 அவர்களுக்கு அதில் சிரமம் ஏதும் ஏற்படாது. இன்னும், அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களாக இல்லை.

15:49 (நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.”

15:50 “இன்னும் நிச்சயமாக என் தண்டனைதான் துன்புறுத்தக்கூடிய தண்டனை!”

15:51 மேலும், (நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.