>

உமர் ஷரீஃப் — 262

15:1 அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்களுடைய; இன்னும், தெளிவான குர்ஆனுடைய வசனங்களாகும்.

15:2 நிராகரித்தவர்கள், தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே! என்று (மறுமையில்) பெரிதும் ஆசைப்படுவார்கள்.

15:3 (நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் உண்ணட்டும்; இன்னும், அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்; மேலும். அவர்களுடைய ஆசைகள் (மறுமையை விட்டும்) அவர்களை திசை திருப்பட்டும். ஆக, (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) விரைவில் அறிவார்கள்.

15:4 எந்த ஓர் ஊரையும் அதற்கென குறிப்பிட்ட ஒரு தவணை இருந்தே தவிர நாம் (உடனே அதை) அழிக்கவில்லை.

15:5 எந்த ஒரு சமுதாயமும் தங்களது தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.

15:6 மேலும், (உம்மை நோக்கி) “ஓ அறிவுரை (நிறைந்த குர்ஆன்) இறக்கப்பட்டவரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகிறார்கள்.

15:7 “நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால், நம்மிடம் (உமக்கு சாட்சிகளாக) வானவர்களை நீர் கொண்டு வரலாமே?”

15:8 உண்மை(யான தண்டனை)யைக் கொண்டே தவிர வானவர்களை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம். மேலும், (அப்படி இறக்கி, அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) அப்போது அவர்கள் அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள்.

15:9 நிச்சயமாக நாம்தான் இந்த அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம்.

15:10 (நபியே!) உமக்கு முன்பு முன்னோர்களின் (பல) பிரிவுகளில் திட்ட வட்டமாக (பல தூதர்களை) அனுப்பினோம்.

15:11 அவர்களிடம் எந்த ஒரு (இறைத்) தூதரும் வருவதில்லை, அவரை அவர்கள் கேலி செய்பவர்களாக இருந்தே தவிர.

15:12 (முன்னர் நாம் எப்படி செய்தோமோ) அதுபோன்றே, அ(ந்த நிராகரிப்பு தனத்)தை (இந்த) குற்றவாளிகளின் உள்ளங்களிலும் புகுத்துகிறோம்.

15:13 (ஆகவே,) அவர்கள் இவரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். மேலும், முன்னோரின் வழிமுறை திட்டமாக சென்றுவிட்டது. (அவர்களைப் போலவே இவர்களும் அழிந்து போவார்கள்.)

15:14 அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் திறந்து, அதில் பகல் நேரத்தில் அவர்கள் ஏறினாலும்,

15:15 அவர்கள் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மாறாக), “எங்கள் கண்கள் நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; மாறாக, நாங்கள் மந்திரம் செய்யப்பட்ட மக்களாக ஆகிவிட்டோம்” என்றே கூறுவார்கள்.