>

உமர் ஷரீஃப் — 252

13:19 ஆக, உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதெல்லாம் உண்மைதான் என்று அறிபவர் (அதை அறியாமல்) குருடராக இருப்பவரைப் போன்று ஆவாரா? (ஆகவே மாட்டார்.) நல்லுபதேசம் பெறுவதெல்லாம் நிறைவான அறிவுடையவர்கள்தான்.

13:20 அவர்கள் அல்லாஹ்வின் (பெயரால் தங்களுக்குள் செய்த) ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள். இன்னும், உடன் படிக்கையை முறிக்க மாட்டார்கள்.

13:21 இன்னும், அவர்கள், எது சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவினானோ அ(ந்த சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள். இன்னும், அவர்கள், தங்கள் இறைவனை அஞ்சுவார்கள். மேலும், கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள்.

13:22 இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் முகத்தை நாடி பொறுமையாக இருப்பார்கள்; மேலும், தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; இன்னும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்வார்கள்; இன்னும், நல்லதைக் கொண்டு கெட்டதைத் தடுப்பார்கள். இ(த்தகைய)வர்கள், இவர்களுக்குத்தான் மறுமையின் அழகிய முடிவுண்டு.

13:23 (நல்ல முடிவு என்பது,) “அத்ன்” சொர்க்கங்கள் ஆகும். அதில் இவர்களும், இவர்களுடைய மூதாதைகளில், இவர்களுடைய மனைவிகளில், இவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்களும் பிரவேசிப்பார்கள். ஒவ்வொரு வாசலில் இருந்தும் வானவர்கள் இவர்களிடம் பிரவேசிப்பார்கள்.

13:24 நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக! ஆக, மறுமையின் அழகிய முடிவு மிகச் சிறந்ததாகும்.

13:25 மேலும், எவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை அது உறுதியான பின்னர் முறிக்கிறார்களோ; இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவினானோ அ(ந்த சொந்த பந்தத்)தை துண்டிக்கிறார்களோ; இன்னும், பூமியில் விஷமம் (-கொலை, கொள்ளை, கலகம், பொது சொத்தில் கையாடல், ஊழல்) செய்கிறார்களோ ஆகிய இவர்கள் இவர்களுக்கு சாபம்தான். இன்னும், இவர்களுக்கு (கடுமையான தண்டனைகள் உடைய) மிகக் கெட்ட வீடு உண்டு.

13:26 அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு வாழ்க்கை வசதியை விசாலப்படுத்துகிறான். (தான் நாடுகிறவர்களுக்கு அதை) சுருக்கிவிடுகிறான். மேலும், (மறுமையை நிராகரிக்கின்ற) அவர்கள் உலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்கிறார்கள். உலக வாழ்க்கையோ மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும்போது) ஒரு (சொற்ப) சுகமாகவே தவிர இல்லை.

13:27 நிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்) மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், (நிராகரிப்பிலிருந்து விலகி அவன் பக்கம்) திரும்பியவர்களுக்கு அவனை நோக்கி (வருவதற்கான நேரான பாதையை) வழிகாட்டுகிறான்.

13:28 (அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. “அல்லாஹ்வின் நினைவினால் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.