>

உமர் ஷரீஃப் — 25

2:164 நிச்சயமாக வானங்கள் இன்னும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறுவதிலும், மனிதர்களுக்கு பலன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் (மழை) நீரை இறக்கி, அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிப்பதிலும், கால்நடைகளை எல்லாம் பூமியில் பரப்பியதிலும், காற்றை(ப் பலகோணங்களில்) திருப்பிவிடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்திலும் திட்டமாக (பல) அத்தாட்சிகள் சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு இருக்கின்றன.

2:165 மக்களில் அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு) சமமானவர்களை (-கற்பனை தெய்வங்களை) ஏற்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அன்பு வைக்கப்படுவது போல் அவர்கள் அவற்றின் மீது அன்பு வைக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள். அநியாயக்காரர்கள் (நரக) தண்டனையை (நேருக்கு நேர் கண்ணால்) காணும்போது, (தங்களது இறுதி முடிவு என்ன என்பதை) பார்த்துவிட்டால், “அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (தாம் வணங்கிய தெய்வங்கள் சக்தி அற்றவை;) தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; (நம்மை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் காப்பாற்ற முடியாது)” என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

2:166 (மதத் தலைவர்களும் அவர்களை பின்பற்றுபவர்களும் மறுமையில் நரக) தண்டனையைக் கண்கூடாக பார்த்த சமயத்தில் பின்பற்றப்பட்ட (மதத் தலை)வர்களோ (தங்களை) பின்பற்றியவர்களை விட்டு விலகிவிடும்போது; (அவர்கள் எல்லோரும் தங்கள் வெற்றிக்காக நம்பியிருந்த) காரணிகள் (-சிலைகளும் அவற்றுக்கு செய்த வழிபாடுகளும்) அவர்களை விட்டு துண்டித்து (பயனற்று போய்)விடும்போது (“அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; தாம் வணங்கிய தெய்வங்களுக்கு அறவே சக்தி இல்லை; தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் நம்மை காப்பாற்ற முடியாது” என்பதை அவர்கள் எல்லோரும் திட்டமாக புரிந்து கொள்வார்கள்).

2:167 இன்னும், பின்பற்றியவர்கள் (அப்போது) கூறுவார்கள்: “(உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு சாத்தியமானால் அவர்கள் எங்களைவிட்டு (இப்போது) விலகியதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிவிடுவோம்.” இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்கள் மீது கடும் துயரங்களாக அமையும்படி அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். இன்னும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டார்கள்.

2:168 மக்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதையே உண்ணுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.

2:169 அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீமையையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதையும்தான்.