>

உமர் ஷரீஃப் — 235

11:118 உம் இறைவன் நாடியிருந்தால் மக்களை (ஒரே மார்க்கமுடைய) ஒரே ஒரு வகுப்பினராக ஆக்கியிருப்பான். அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபட்டவர்களாகவே தொடர்ந்து இருப்பார்கள்.

11:119 (எனினும், அவர்களில்) உம் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் அல்லாஹ்வின் நேரிய ஓரே மார்க்கத்தில் நிலைத்திருப்பார்கள். ஒரே மார்க்கத்தில் நிலைத்திருந்து அல்லாஹ்வின்) அ(ருளை பெறுவ)தற்காகத்தான் அவன் அவர்களைப் படைத்தான். “ஜின்கள்; இன்னும், மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனின் வாக்கு நிறைவேறி விட்டது.

11:120 இன்னும், தூதர்களின் சரித்திரங்களிலிருந்து உம் உள்ளத்தை எதைக் கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை எல்லாவற்றையும் உமக்கு விவரிக்கிறோம். இன்னும், இவற்றில் உமக்கு உண்மையும், நம்பிக்கையாளர்களுக்கு நல்லுபதேசமும் அறிவுரையும் வந்தன.

11:121 (நபியே!) நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு கூறுவீராக! “நீங்கள் உங்கள் போக்கில் (உங்களுக்கு விருப்பமான செயல்களை) செய்யுங்கள்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் போக்கில் எங்கள் இறைவன் கட்டளையிட்டதை) செய்வோம்.

11:122 இன்னும், (உங்கள் முடிவை) நீங்கள் எதிர்பாருங்கள். நிச்சயமாக நாங்கள் (எங்கள் முடிவை) எதிர்பார்க்கிறோம்.

11:123 மேலும், வானங்கள் இன்னும் பூமியின் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன! அவனிடமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)ப்பீராக! உம் இறைவன் நீங்கள் செய்பவற்றைப் பற்றி அறியாதவனாக இல்லை.

12:1 அலிஃப் லாம் றா. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.

12:2 நிச்சயமாக நாம் இ(ந்த வேதத்)தை அரபிமொழியை சேர்ந்த குர்ஆனாக இறக்கினோம்.

12:3 (நபியே!) இந்த குர்ஆனை உமக்கு நாம் வஹ்யி அறிவித்ததன் வாயிலாக சரித்திரங்களில் மிக அழகானதை உமக்கு விவரிக்கப் போகிறோம். இன்னும், நிச்சயமாக இதற்கு முன்னர் (இந்த சரித்திரத்தை) அறியாதவர்களில் நீர் இருந்தீர்.

12:4 “என் தந்தையே! நிச்சயமாக நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கனவில் கண்டேன். அவை எனக்குச் சிரம் பணியக்கூடியவையாக இருக்கும் நிலையில் அவற்றை நான் கனவில் கண்டேன்” என்று யூஸுஃப் தன் தந்தைக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.