உமர் ஷரீஃப் — 229
11:63 (அதற்கு ஸாலிஹ்) கூறினார்: “என் மக்களே! அறிவியுங்கள்: நான் என் இறைவனிடமிருந்து (நபித்துவத்தின்) தெளிவான அத்தாட்சியில் இருந்தால், இன்னும், அவன் தன்னிடமிருந்து (நபித்துவம் என்ற) அருளை எனக்கு தந்திருந்தால், (இந்த நிலையில் அவனது தூதுத்துவத்தை உங்களுக்கு எடுத்துரைக்காமல்) நான் அவனுக்கு மாறு செய்தால் அல்லாஹ்விடத்தில் எனக்கு யார் உதவுவார்? ஆக, (நான் உங்களுக்கு மாறு செய்வதால் என்னை) நஷ்டவாளி என்று (நீங்கள்) சொல்வதை தவிர (எதையும்) எனக்கு நீங்கள் அதிப்படுத்த மாட்டீர்கள்.”
11:64 இன்னும், “என் மக்களே! இது உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பெண் ஒட்டகமாகும். ஆகவே, அதை விட்டுவிடுங்கள், அது அல்லாஹ்வின் பூமியில் சாப்பிடட்டும்; இன்னும், அதற்கு எவ்வித கெடுதியும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அதிசீக்கிரமான தண்டனை உங்களை பிடித்துக் கொள்ளும்.”
11:65 ஆக, அவர்கள் அ(ந்த ஒட்டகத்)தை வெட்டினார்கள். ஆகவே, (ஸாலிஹ்) கூறினார்: “மூன்று நாட்கள் உங்கள் ஊரில் சுகமாக இருங்கள். (பிறகு, தண்டனை வரும்.) இது ஒரு பொய்ப்பிக்கப்படமுடியாத வாக்காகும்.”
11:66 ஆக, நம் கட்டளை வந்தபோது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளினால் பாதுகாத்தோம். இன்னும், (தண்டனை இறங்கிய) அந்நாளின் இழிவில் இருந்தும் (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக உம் இறைவன்தான் மிக்க பலமானவன், மிகைத்தவன்.
11:67 இன்னும், அநீதியிழைத்தவர்களை கடுமையான இடி முழக்கம் பிடித்தது. ஆக, அவர்கள் காலையில் தங்கள் இல்லங்களில் இறந்தவர்களாக ஆகிவிட்டனர்.
11:68 அவற்றில் அவர்கள் வசிக்காததைப் போன்று ஆகிவிட்டனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸமூது (மக்கள்) தங்கள் இறைவனை நிராகரித்தனர். அறிந்து கொள்ளுங்கள்! ஸமூது (மக்களு)க்கு அழிவு உண்டாகட்டும்.
11:69 இன்னும், திட்டவட்டமாக நம் (வானவ) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியை கொண்டு வந்தனர். “(உமக்கு) ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக” என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு இப்ராஹீம்,) (“உங்களுக்கும்) ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!” என்று கூறினார். உடனே தாமதிக்காது சுடப்பட்ட ஒரு கன்றுக்குட்டி(யின் கறி)யைக் கொண்டு வந்தார்.
11:70 ஆக, அவர்களுடைய கைகள் அதன் பக்கம் செல்லாததை அவர் பார்த்தபோது அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; இன்னும், அவர்களைப் பற்றிய பயத்தை அவர் (மனதில்) மறைத்தார். “(இப்ராஹீமே) பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய மக்களின் பக்கம் (அம்மக்களை அழிப்பதற்காக) அனுப்பப்பட்டோம்” என்று (அந்த வானவர்கள்) கூறினார்கள்.
11:71 இன்னும், அவருடைய மனைவி (ஸாரா) நின்றுகொண்டிருந்தாள். ஆக, (வானவர்கள் கூறியதைக் கேட்ட பின்னர் லூத் நபியின் சமுதாயம் அழிக்கப்பட போவதையும், அதை அவர்கள் அறியாமல் இருப்பதையும் நினைத்து) அவள் சிரித்தாள். ஆக, அவளுக்கு (குழைந்தாயாக) இஸ்ஹாக்கையும்; இன்னும், இஸ்ஹாக்கிற்குப் பின்னால் (பேரனாக) யஅகூபையும் (வழங்குவோம் என்று) நற்செய்தி கூறினோம்.