உமர் ஷரீஃப் — 213
10:34 (நபியே!) கூறுவீராக: “படைப்புகளை முதலாவதாக உருவாக்கி, (அவை இறந்த) பிறகு, அவற்றை மீண்டும் உருவாக்குபவன் (யாரும்) உங்கள் தெய்வங்களில் உண்டா?” (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்தான் படைப்புகளை முதலாவதாக உருவாக்குகிறான். பிறகு, (அவை இறந்த பின்னர்) அவற்றை மீண்டும் (மறுமையில்) உருவாக்குவான்.” ஆக, (இத்தகைய இறைவனை வணங்குவதிலிருந்து சிலைகளை வணங்குவதன் பக்கம்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?
10:35 (நபியே) கூறுவீராக: “சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவர் (யாரும்) உங்கள் தெய்வங்களில் உண்டா?” (நபியே) கூறுவீராக: “அல்லாஹ்தான் சத்தியத்திற்கு நேர்வழி காட்டுகிறான். ஆக, சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவன் பின்பற்றப்படுவதற்கு மிகத் தகுதியானவனா? அல்லது, தான் நேர்வழி காட்டப்பட்டால் தவிர நேர்வழி அடையாதவ(ன் பின்பற்ற தகுதியானவ)னா? ஆக, உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்”
10:36 இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தேகத்தையே தவிர (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை. நிச்சயமாக சந்தேகம் உண்மையை விட்டும் ஒரு சிறிதும் பலன்தராது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
10:37 இன்னும், இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. எனினும், இது (வேதங்களில்) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும், (மார்க்க) சட்டங்களை விவரித்துக் கூறக் கூடியதாகவும் இருக்கிறது. அகிலங்களின் இறைவனிடமிருந்து இ(து இறக்கப்பட்டது என்ப)தில் அறவே சந்தேகமில்லை.
10:38 “இதை (நம் தூதர்) இட்டுக்கட்டினார்” என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! “ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு முடிந்தவர்களை (உங்கள் உதவிக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!”
10:39 மாறாக, எதைப் பற்றிய அறிவை இவர்கள் சூழ்ந்தறியவில்லையோ அதைப் பொய்ப்பித்தனர். அதன் விளக்கமோ இதுவரை இவர்களுக்கு வரவில்லை. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அவர்கள் அறியாததை) பொய்ப்பித்தனர். ஆகவே, அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக!
10:40 இன்னும், இ(ந்த வேதத்)தை நம்பிக்கை கொள்பவரும் அவர்களில் உண்டு; இன்னும், இதை நம்பிக்கை கொள்ளாதவரும் அவர்களில் உண்டு. இன்னும், உம் இறைவன் விஷமிகளை மிக அறிந்தவன்.
10:41 (நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், “என் செயல் எனக்கு; இன்னும், உங்கள் செயல் உங்களுக்கு; நான் செய்வதிலிருந்து நீங்கள் நீங்கியவர்கள்; இன்னும், நீங்கள் செய்வதிலிருந்து நான் நீங்கியவன்” என்று கூறுவீராக!
10:42 இன்னும், அவர்களில் உம் பக்கம் (நீர் கூறும் உண்மைகளை) செவியுறுபவர்களும் உண்டு. (ஆனால், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.) ஆக, செவிடர்களை, - அவர்கள் சிந்தித்து புரியாதவர்களாக இருந்தாலும் - நீர் கேட்க வைப்பீரா? (அது உம்மால் முடியுமா?)