உமர் ஷரீஃப் — 206
9:118 இன்னும், (மன்னிப்பு வழங்கப்படாமல்) பிற்படுத்தப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்). இறுதியாக, பூமி விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு நெருக்கடியாக ஆகியது. இன்னும், அவர்கள் மீது அவர்களின் ஆன்மாக்கள் நெருக்கடியாக ஆகியது. இன்னும், அல்லாஹ்விடமிருந்து (தப்பித்து) ஒதுங்குமிடம் அவனிடமே தவிர (வேறு எங்கும்) அறவே இல்லை என அவர்கள் உறுதி(யாக அறிந்து) கொண்டனர். பிறகு, அவர்கள் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்காக அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் (அடியார்களின்) தவ்பாவை அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன்.
9:119 நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், உண்மையாளர்களுடன் இருங்கள்.
9:120 மதீனாவாசிகள்; இன்னும், அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு - அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரை விட தங்கள் உயிர்களை நேசிப்பதும் - ஆகுமானதல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகமோ, களைப்போ, பசியோ எது ஏற்பட்டாலும்; இன்னும், நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற இடத்தை இவர்கள் மிதித்தாலும்; இன்னும், எதிரிகளிடமிருந்து துன்பத்தை அவர்கள் அடைந்தாலும், இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்படாமல் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்.
9:121 இன்னும் (அல்லாஹ்வின் பாதையில்) சிறிய, பெரிய செலவை அவர்கள் செலவு செய்தாலும் ஒரு பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து சென்றாலும் அவை அவர்களுக்கு (நன்மைகளாக) பதியப்படாமல் இருக்காது. இறுதியாக, அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு மிக அழகிய(சொர்க்கத்)தை அல்லாஹ் அவர்களுக்குக் கூலியாக கொடுப்பான்.
9:122 நம்பிக்கையாளர்கள் அனைவருமே (நபியை தனியாக விட்டுவிட்டு ஊரிலிருந்து) புறப்படுவது சரியல்ல. மார்க்கத்தில் அவர்கள் ஞானம் பெறுவதற்காகவும் தங்கள் சமுதாயத்திடம் திரும்பும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் உங்களில் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு கூட்டம் (மட்டும் போருக்கு) புறப்பட்டிருக்க வேண்டாமா? (ஊரில் தங்கிய) அவர்கள் (இதன் மூலம்) எச்சரிக்கையாக இருப்பார்கள்.