உமர் ஷரீஃப் — 204
9:107 இன்னும், கெடுதல் செய்வதற்காகவும்; நிராகரிப்பிற்காகவும்; நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதற்காகவும்; இதற்கு முன்னர் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிட்டவர்(கள் வந்து தங்குவதற்காக அவர்)களை எதிர் பார்த்திருப்பதற்காகவும் ஒரு மஸ்ஜிதை எடுத்துக் கொண்டவர்களும் (மதீனாவிலும் மதீனாவை சுற்றிலும்) இருக்கிறார்கள். இன்னும், “நாங்கள் நன்மையைத் தவிர (கெட்டதை) நாடவில்லை” என்று நிச்சயமாக சத்தியம் அவர்கள் செய்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
9:108 (நபியே!) ஒருபோதும் அ(ந்த மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா) மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், சில ஆண்கள் இருக்கின்றனர். அவர்கள் அதிகம் பரிசுத்தமாக இருப்பதை விரும்புகின்றனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
9:109 அல்லாஹ்வின் அச்சம் இன்னும் (அவனது) பொருத்தத்தின் மீது தமது கட்டிடத்தை அடித்தளமிட்டவர் சிறந்தவரா? அல்லது, சரிந்து விடக்கூடிய ஓடையின் ஓரத்தில் தமது கட்டிடத்திற்கு அடித்தளமிட்டு, அது அவருடன் நரக நெருப்பில் சரிந்துவிட்டதே அவ(ர் சிறந்தவ)ரா?. அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
9:110 அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகமாகவே நீடித்திருக்கும், அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டானால் தவிர (அது நீங்காது). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
9:111 நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் அவர்களுடைய செல்வங்களையும் நிச்சயம் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்கு பகரமாக விலைக்கு வாங்கினான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; ஆக, அவர்கள் (எதிரிகளை) கொல்வார்கள்; இன்னும் (எதிரிகளால்) கொல்லப்படுவார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் அவன் மீது கடமையான வாக்குறுதியாக இது இருக்கிறது. இன்னும், அல்லாஹ்வைவிட தனது உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, எதற்குப் பகரமாக நீங்கள் (உங்களை) விற்றீர்களோ அந்த உங்கள் விற்பனையைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். இதுதான் மகத்தான வெற்றி!